தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை எப்போது, எந்தப்படம், எந்த தேதியில் வெளியாக வேண்டும் என்று நிர்ணயிப்பது தயாரிப்பாளரோ, கதாநாயகனோ கிடையாது, நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான். அதுவும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் மோனிகா ஷெர்கில் சொல்லும் தேதி தான் படம் ரிலீசாகும்.

200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், தனது கடைசி படம் (?) ஜனநாயகன் ரிலீஸ் தேதியை இந்த வருடத்தில் வைக்க முடியாததற்கு காரணம் நெட் பிளிக்ஸ் தான். ஏனெனில் ஒருகாலத்தில் சாட்டிலைட் ரைட்ஸ் என்று சொல்லப்படும் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமை தான் பட வெளியீட்டை நிர்ணயம் செய்தன. சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்கள் பலகோடி கொடுத்து வாங்கும் தொகையைப் பொறுத்தே படங்கள் வெளியாகின.
இதையும் படிங்க: எம்புரான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட ரஜினிகாந்த்.. மலையாளப் படமா? ஹாலிவுட் படமா என வியப்பு..!
இன்று அந்த இடத்தை பிடித்துள்ளன ஓடிடி தளங்கள். குறிப்பாக நெட்பிளிக்ஸ். வருடத்திற்கு இத்தனைக்கோடி என்று ஒதுக்கீடு செய்து அதற்கு என்னென்ன படங்களை வாங்க வேண்டும் என்று அவர்கள் பட்டியல் போடுகின்றனர். அதற்கு தகுந்தார்போல் தங்கள் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிடுகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதிக்கு நடிகர் விஜயின் ஜனநாயகன் தள்ளிப்போனதும் இதனால்தான். இந்த வருடம் எந்தெந்த படங்களை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்காக ஏற்கனவே தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதால் இந்த வருடம் உங்கள் படத்தை வாங்க முடியாது, ரிலீஸ் தேதியை தள்ளி வையுங்கள் என்று நெட்பிளிக்ஸ் கூறியதால் ஜனநாயகன் அடுத்த ஆண்டுக்கு போயுள்ளது.

அந்த வகையில் ஓடிடி தளங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதேபோன்று நேரடி படங்களையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்காக திரையரங்குகளை அவர்கள் நாடுவதில்லை. நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியிடுவதால், திரையரங்கு வந்து பார்க்கும் ரசிகர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. அந்த வரிசையில் வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வெளியாக உள்ள டெஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'டெஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய நெட்பிளிக்ஸ் இந்தியாவின் துணைத்தலைவர் மோனிகா ஷெர்கில், "தமிழ் சினிமாவில் திறமையான கதைகள் பல வெளியாகி இருக்கிறது. இதில் 'டெஸ்ட்' திரைப்படமும் ஒன்று. இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா கதை குடும்பம், முக்கிய கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசும்.

இயக்குநர் சஷிகாந்த் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் என திறமையான நடிகர்கள் அனைவரும் முதல் முறையாக இந்த படத்திற்காக ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். இந்த வருடம் எங்களுடைய முதல் ஒரிஜினல் தமிழ் திரைப்படம் 'டெஸ்ட்'. " என்றார்.
நடிகர் மாதவன் பேசும்போது, “ஒரு கதாபாத்திரம் என்றால் நல்லவராக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி அதை எந்த அளவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் தான் கவனமாக இருப்பேன் அந்தவகையில், டெஸ்ட் படத்தின் கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருந்தது. என்னுடைய பெஸ்ட் கொடுத்து இருக்கிறேன்” என்றார்.

நடிகர் சித்தார்த் பேசும்போது, “டெஸ்ட் கிரிக்கெட்டர் ரோல் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகிதான் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதட்டம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். எனக்கு கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் பிடிக்கும். அவருக்கு என் கதாபாத்திரத்தை டெடிகேட் செய்ய விரும்புகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: சேட்டன்கள் எப்படிதான் இப்படி படம் எடுக்குறாங்களோ.. இணையத்தைக் கலக்கும் ஆசிப் அலியின் ரேகாசித்ரம்..!