உங்கள் சிபில் ஸ்கோர் எவ்வளவு? ..
சிபில் ஸ்கோரின் கதை...
உலகில் கடன் வாங்காத நாடுகளே இல்லை எனலாம். அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளே கூட ஒருவருக்கு ஒருவர் கடன் வாங்கியும் கொடுத்தும் தான் காலத்தை தள்ளுகின்றன. இதில் இந்தியாவும் விதிவிலக்கு அல்ல. இந்தியாவின் ஒட்டுமொத்த கடன்தொகை 14 லட்சம் கோடி ரூபாய் ஆகும். கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது தெரிவித்த புள்ளிவிவரம் இது.
நாடுகளின் நிலையே இப்படி என்றால் தனிமனிதர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பொதுவாக எதற்கெல்லாம் மனிதர்கள் கடன் வாங்குகிறார்கள். குடும்பம் - மருத்துவம் - கல்வி - தொழில் ஆகிய முக்கிய தேவைகளுக்காக கடன் பெறுவது வாடிக்கை. உறவினர்களிடம், நண்பர்களிடம் கைமாற்றாக வாங்குவது ஒருபாணி. நிலத்தை விற்றோ, அடமானம் வைத்தோ, தங்க நகைகளை விற்றோ, அடமானம் வைத்தோ பெறுவது மற்றொரு பாணி. ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் அதிகம் கடன்வாங்கும் முறையாக மாறி இருப்பது வங்கிகளில் கடன்பெறுவது தான்.
வங்கிகள் எவ்வாறு கடன் தருகின்றன. நிலப்பத்திரங்கள் அல்லது முதலீடுகளுக்கு ஈடாக கடன் தருவது வாடிக்கை. ஆனால் தனிநபர் கடன்கள் அல்லது நிறுவனங்கள் பெறும் கடன் என்பதற்கு அடிப்படை அலகாக வைக்கப்படுவது சிபில் ஸ்கோர் (CIBIL SCORE). உங்கள் சிபில் ஸ்கோர் எவ்வளவு என்பதை பொறுத்தே நீங்கள் வாங்கும் கடன் அளவு, கால அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது. நாமே கூட வங்கியில் கடன்பெறும்போது இந்த சிபில் ஸ்கோர் என்ற சொல்லைக் கேட்டிருப்போம். "உங்கள் சிபில் ஸ்கோர் குறைவா இருக்குங்க, லோன் எலிஜிபிள் இல்ல" என்ற உரையாடலை எதிர்கொண்டிருப்போம்.
இதையும் படிங்க: பேங்க் அக்கவுண்ட்.. லாக்கர்கள் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!
சரி, இந்த சிபில் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? சிபில் நிறுவனம் எந்த அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்ற விவரங்கள் நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்.. வாருங்கள் கொஞ்சம் அலசுவோம்..
சிபில் ஸ்கோர் நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. முதலாவது உங்கள் மாதாந்திர கடன் தவணையை குறிப்பிட்ட தேதிகளில் செலுத்துகிறீர்களா? இல்லையா? 2-வது பாதுகாப்பான கடன்கள், பாதுகாப்பற்ற கடன்களை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள் (பாதுகாப்பான கடன் என்றால் பத்திரங்கள், நகைகள் போன்றவற்றை வைத்து வாங்குவது, பாதுகாப்பற்ற கடன் என்றால் சம்பளத்தை அடிப்படையாக கொண்டு பெறுவது) 3-வது மீண்டும் மீண்டும் கடன்வாங்குவது தொடர்பாக வங்கிகளை அணுகுகிறீர்களா? 4-வது கடன் உச்சவரம்புக்கு நெருங்கி அல்லது கூடுதலாக கடன்பெற்றுள்ளீர்களா? இந்த நான்கின் அடிப்படையில் உங்களுக்கான சிபில் ஸ்கோர் நிர்ணயம் செய்யப்படும்.
இந்தியாவில் நான்கு நிறுவனங்கள் சிபில் ஸ்கோரை அளவீடு செய்ய மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ஒன்று CIBIL எனப்படும் The Credit Information Bureau (India) Limited.. 2001 முதல் இந்நிறுவனம் சிபில் ஸ்கோரை கணக்கீடு செய்து வருகிறது. அதேபோன்று Experian, Equifax, CRIF High Mark ஆகிய நிறுவனங்கள் 2010-ம் ஆண்டு முதல் இதே பணியில் ஈடுபட்டுள்ளன.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த CIBIL நிறுவனத்தை 2016-ம் ஆண்டு அமெரிக்காவின் Transunion என்ற பன்னாட்டு நிறுவனம் வாங்கி விட்டது. அதாவது நாம் எவ்வளவு கடன் பெற வேண்டும், நமக்கான சிபில் ஸ்கோர் எவ்வளவு என்பதை இந்திய வங்கிகள் நிர்ணயம் செய்யாது. மாறாக, அமெரிக்காவின் நிதிநிறுவனமான ட்ரான்ஸ்யூனியன் தான் செய்யும். அவர்கள் நிர்ணயம் செய்வதே நம் சிபில் தலையெழுத்து. எப்படி இருக்கிறது பாருங்கள் கதை. அமெரிக்காகாரன் கடன் வாங்க இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அளவுகோலை வைத்தால் அந்நாட்டினர் ஏற்றுக் கொள்வார்களா? பிறகு இந்தியாவில் மட்டும் எப்படி இது சாத்தியமானது.
சிகாகோவை தலைமையிடமாக கொண்டு Transunion செயல்படுகிறது. ஏறத்தாழ 60 கோடி இந்தியர்களின் வங்கி பரிவர்த்தனைகளை, கடன் பற்று விவரங்களை இந்நிறுவனம் கண்கொத்தி பாம்பாக பார்த்து வருகிறது. கூடவே 3 கோடி நிறுவனங்களின் இது கண்காணிக்கிறது. இதன் பங்குதாரர் நிறுவனம் நியூஜெர்சியில் செயல்படும் Dun and Bradstreet என்பதாகும். இந்த அமைப்பு 15 கோடி இந்தியர்களின் வரவுசெலவு கணக்குகளை உற்றுநோக்குகிறது.
சிபில் க்ரெடிட் ஸ்கோர் என்பது 3 இலக்க எண்ணில் குறிக்கப்படுகிறது. இது தனிநபர்களின் கடன்வரலாறு மற்றும் கடன் மதிப்பீட்டின் வகையில் கணக்கிடப்படுகிறது. இந்த மதிப்பெண் 300 முதல் 900 என்ற புள்ளிகளுக்குள் வகைப்படுத்தப்படுகிறது. பொதுவாக 720 என்ற எண் இருந்தால் அதுஒரு நல்ல சிபில் ஸ்கோராக பார்க்கப்படுகிறது. விரிவாக சொல்வதென்றால், கடன் பெறுவதற்கான சிபில் ஸ்கோர் 600 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால் மிகமிக குறைவு, 600 முதல் 649 புள்ளிகள் இருந்தால் சற்று சிரமம், 650 முதல் 699 புள்ளிகள் இருந்தால் வாய்ப்புகள் உண்டு, 700 முதல் 749 புள்ளிகள் இருந்தால் நன்று, 750 முதல் 900 இருந்தால் மிகச்சிறப்பு.. இந்த புள்ளிகளின் அடிப்படையில் தான் நமக்கான கடன் அளவு மற்றும் அதற்கான வட்டி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
சரி சிபில் அமைப்பு தரும் இந்த சிபில் ஸ்கோர் எந்த அளவு உண்மையானது, நம்பகமானது, வெளிப்படையானது என்ற கேள்வி வருமல்லவா?. 2003-ம் ஆண்டு அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தைச் சேர்ந்த ஜுடி தாமஸ் என்பவரது கணக்கில் தவறான புள்ளி விவரத்தை சேர்த்த வழக்கில் ட்ரான்ஸ்யூனியன் அமைப்பு 5 கோடி அபராதம் செலுத்தியது. இதுபோன்ற பல வழக்குகளில் மன்னிப்புக் கோரியதோடு, அபராதம் கட்டிய கதையும் ட்ரான்ஸ்யூனியனுக்கு உண்டு. 2017-ம் ஆண்டு மத்திய அமரிக்காவில் ட்ரான்ஸ்யூனியன் இணையதளம் ஹாக்கர்களால் ஆக்ரமிப்புக்கு உள்ளானது. 2022-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள ட்ரான்ஸ்யூனியன் இணையதளத்தில் 5 கோடி மக்களின் தரவுகள் திருடப்பட்டு அவை வெளியிடப்படாமல் இருக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகை தரவேண்டும் என பேரமும் நடந்தது. இந்த நிறுவனம் தான் நமது கடன் தலையெழுத்தை எழுதிக் கொண்டிருக்கிறது, நம்புங்கள்.
உங்கள் சிபில் ஸ்கோரை இதைப் பண்ணுங்க, அதைப் பண்ணுங்க என்று நிறைய டிப்ஸ்-களை சமூக வலைதளங்களில் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் சிபில் என்ற அமைப்பே சரியானது தானா? ஏன் அது வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்ற கேள்வியை எழுப்பும் நேரம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது. அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில், மேக் இன் இந்தியா போன்ற முழக்கங்கள் பெரிதாக பேசப்படும் காலகட்டத்தில் ட்ரான்ஸ்யூனியன் அமைப்பு ஏன் இந்தியாவின் தலையெழுத்தை எழுத அனுமதிக்க வேண்டும்?.. நம் கடன், நம் அமைப்பு என ஏன் இருக்கக் கூடாது?..
இதையும் படிங்க: ஜனவரி 12 முதல் 26 வரை.. ஜனவரி மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும்.?