33 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி அவுட்..! திருப்பி எடுத்த அந்நிய முதலீட்டாளர்கள்: காரணம் என்ன?
இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து கடந்த 33 நாட்களில் மட்டும் ரூ.ஒரு லட்சம் கோடி முதலீட்டை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளது இந்திய பங்குச்சந்தைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024 அக்டோபர் மாதத்திலிருந்து இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை எடுத்துள்ளனர். இதனால் பிஎஸ்இ எனப்படும் மும்பை பங்குச்சந்தை கடந்த அக்டோபரிலிருந்து 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேசமயம், உள்நாட்டு முதலீட்டாளர்களைக் கொண்ட தேசியப் பங்குச்சந்தைகளில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் 19 முறையே 21 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
வளர்ந்து வரும் பொருளாதாரம், சந்தைகளைக் கொண்ட நாடுகளில் கடந்த மாதம் முதல் இந்தமாதம் வரை அந்நிய நிறுவனமுதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுதல் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா(18.90 கோடி டாலர்), பிரேசில்(2.10 கோடி டாலர்), இந்தோனேசியா(38.10 கோடி டாலர்), மலேசியா(5.90 கோடி டாலர்), பிலிப்பைன்ஸ்(50 லட்சம் டாலர்), தென் கொரியா(27.60 கோடி டாலர்), தைவான்(11.40 கோடி டாலர்), வியட்நாம்(23.50 கோடி டாலர்), தாய்லாந்து(17 லட்சம் டாலர்) ஆகிய நாடுகளில் கோடிக்கணக்கில் முதலீட்டை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: தொட்டாலே ஷாக் அடிக்குமோ?... தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை...!
அந்நிய முதலீட்டாளர்கள் ஏன் வெளியேறுகிறார்கள்?: இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து அந்நிய முதலீ்ட்டாளர்கள் ஏன் வெளியேறுகிறார்கள் என்பதற்கான காரணத்தை வார்பீல்ட் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் விபுல் போவர் கூறுகையில் “ உலக நாடுகளின் கொள்கைகள் மாற்றம், புதிய கொள்கைகள் உருவாக்கம், குறிப்பாக அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பின் அதிரடியான அறிவிப்புகள் அந்நிய முதலீட்டாளர்களுக்கு நிலையற்ற தன்மையை மனதில் ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலிதான் இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அமெரிக்க சந்தைகள் வலுவடைந்து வருவதால், தங்கள் முதலீட்டை பாதுகாப்பான இடத்தில் வைக்கவே முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்கிறார்கள். அதனால் இந்தியா மட்டுமல்லாமல் வளரும் சந்தைகளைக் கொண்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் முதலீட்டை திரும்பப் பெறுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் எப்படி இருக்கும்: எதிர்காலத்தில் இந்தியப் பங்குச்சந்தைகளில் இதே நிலை தொடருமா என்பது குறித்து கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் தலைவர் ஸ்ரீகாந்த் சவுகான் கூறுகையில் “ இந்தியச் சந்தைகள் தொடர்ந்து சரிவை நோக்கி செல்கின்றன, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது விதித்த வரிகள், உள்நாட்டில் நிலையற்ற வளர்ச்சி, 3ம் காலாண்டு முடிவுகள் ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைத்துள்ளன. தற்போது நிலவும் சந்தை சூழல்கள், பொருளாதாரச் சூழல் ஆகியவை தொடர்ந்து பங்குச்சந்தையை ஊசலாட்டத்தில்தான் வைக்கும்.” எனத் தெரிவித்தார்.
என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்: இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறியது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் “ அந்நிய நிறுவன முதீலட்டாளர்கள் லாபம் ஈட்டும் நோக்கில் தங்கள் பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துள்ளனர். இந்தியப் பொருளாதாரம், இந்தியச் சந்தைச் சூழலில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் முதலீடு செய்து அதை திரும்பப் பெறுகிறார்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: வயதான காலத்தில் பென்ஷன் வேணுமா? மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் வங்கிகள் இவை!