ரூ.19 லட்சம் கோடி காலி.. பாதாளத்தில் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டியில் பெரும் வீழ்ச்சி..! என்ன காரணம்..?
இந்தியப் பங்குசந்தை காலை தொடங்கியவுடன் சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இந்தியப் பங்குசந்தை காலை தொடங்கியவுடன் சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. முதலீட்டாளர்களுக்கு காலை வர்த்தகத்திலேயே ரூ.19 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் உலக நாடுகள் மீது பரஸ்பரவரி விதிப்பை அமல்படுத்தியது, அதற்குப் போட்டியாக சீனா 34 சதவீதம் அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிதிப்பு ஆகியவற்றால் வரிப்போர் ஏற்பட்டதையடுத்து, பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 10,600% வருமானத்தை அள்ளித்தந்த பங்கு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் - எந்த பங்கு.?
உலகளவில் மீண்டும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று முதலீட்டை எடுத்ததால் காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகளும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி புள்ளிகளும் கடுமையாக சரிந்தன. இதனால் காலை வர்த்தகம் தொடங்கியதும் பங்குகளை முதலீட்டாளர்கள் வேகமாக விற்கத் தொடங்கியதால், ரூ.19 லட்சம் கோடிக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது.
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் 3,939 புள்ளிகள் சரிந்து ஏறக்குறைய 5.22 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, 71,425 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 1,680 புள்ளிகள் குறைந்து 5 சதவீதம் சரிந்து, 21,743 புள்ளிகளில் தொடங்கியது. 2020 மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்றுக்குப்பின் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் பங்குகள் விலை 9 சதவீதம் சரிந்தது, இன்போசிஸ், எச்சிஎல் டெக், டெக் மகிந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனப் பங்குகள் பெருத்த அடிவாங்கின.
பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என்ன?
1. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரிவிதிப்பு திட்டத்தை கடந்த 3 ம்தேதி முதல் உலக நாடுகள் மீது திணித்துள்ளார். இதற்குப் போட்டியாக சீனாவும் 34 சதவீதம் வரிவிதிப்பை அமெரிக்கா மீது விதித்துள்ளது. வரிப்போர் இருநாடுகளுக்கு இடையே தொடங்கியதால், அமெரிக்கப் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்லும் என்ற அச்சம் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற உறுதியற்ற சூழல் இருந்ததால், முதீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க பங்குகளை விற்று முதலீட்டை திரும்ப எடுத்தனர்.
2. அமெரிக்க பொருளாதாரத்தில் அடுத்த 12 மாதங்களில் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்படும், 45 சதவீதம் பொருளாதாரம் சரியும் என்று கோல்ட்மென் சாஸ் ஆய்வு நிறுவனம் விடுத்த அறிக்கை முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஜேபி மோர்கன் நிறுவனம், அமெரிக்க பொருளாதாரம் இந்த ஆண்டிலேயே சரிவை நோக்கி செல்லும் என்று கணித்தது முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தியது.
3. ஆசியப் பங்குச்சந்தைகள், அமெரிக்காவின் வால்ஸ் ஸ்ட்ரீட் பங்குச்சந்தை, ஹாங்காங்கின் ஹாங் செங் சந்தை, ஜப்பானினி நிக்கி பங்குச்சந்தை ஆகியவை படுமோசமாக சரிவைச் சந்தித்தன. ஷாங்காய் பங்குச்சந்தை 6 சதவீதம், தென் கொரியாவின் கோஸ்பி 5 சதவீதம், ஜப்பான் சந்தையில் சரிவு மோசமாகியதால், அதன் தாக்கம் இந்தியப் பங்குச்சந்தையிலும் இன்று எதிரொலித்தது.
இதையும் படிங்க: குட்நியூஸ்!! தொடர் சரிவில் தங்கம் விலை... இன்னைக்கு மட்டும் இவ்வளவா?