இந்த வார பங்குச் சந்தை ரிப்போர்ட்.. அடிப்படையை ஆராயாமல் முதலீடு செய்யாதீங்க
05.01.2025 - 10.01.2025: வாரம் பங்குச்சந்தை நிலவரம்
இந்திய பங்குச் சந்தை (பிஎஸ்இ) இன்று மாலையோடு 241.3 புள்ளிகள் சரிந்து (0.31%) 77378.91-ல் இந்த வாரத்தின் முடிவுக்கு வந்தது.
விடுமுறை முடிந்து ஜனவரி 6-ம் தேதி 79,281.65 புள்ளிகளுடன் மீண்டும் தனது பயணத்தை தொடங்கிய நிலையில், என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் வர்த்தகம் தொடங்கியது . அன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 1.5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து, நிஃப்டி 50- ம் அச்சரிவை பிரதிபலிக்க, முதலீட்டாளர்களிடையே இது கவலையை எழுப்பியது. மொத்தத்தில் இந்த வாரம் மட்டுமே 2000 புள்ளிகளை இழந்துள்ளது.
இந்த பெரிய சரிவிற்கு சீனாவில் இருந்து பரவியதாக கூறப்படும் HMPV (மனித நுரையீரலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ்) ஒரு காரணமாக இருக்கலாம் என்று பல பத்திரிகைச் செய்திகள் சுட்டிக்காட்டின, ஆனால் பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான நிறுவனங்களின் பங்குகளை மட்டுமே பாதிக்கும் என்று முதலில் நம்பப்பட்டது.
இதையும் படிங்க: தங்க முதலீட்டை 2025ல் மேற்கொள்வது எப்படி? தங்கம் & வெள்ளியில் முதலீடு செய்பவர்கள் நோட் பண்ணுங்க
ஆனால் இந்த பங்கு சந்தை ஏற்ற இறக்கத்திற்கு HMPV வைரஸ் மட்டுமே காரணமா என்ற சந்தேகமும் முதலில் எழுந்தது. எச்எம்பிவி பயம், கொரோனா வைரஸ் தொற்று போன்று பயத்தை தூண்டினாலும் இந்த வீழ்ச்சிக்கு அந்த வைரஸை மட்டுமே காரணம் கூறி விட முடியாது. வரலாற்று ரீதியாக, டிசம்பர் 2019 இல் கொரோனா வைரஸ் செய்தி வெளிப்பட்டபோது, உலகச் சந்தைகள் மளமளவென சரியத் தொடங்கின.
HMPV முதன்முதலில் 2001 இல் கண்டறியப்பட்டது, இது ஒரு சுவாச மண்டலத்தை பாதிக்கும் வைரஸ் ஆகும், இது ஜலதோஷம் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். குறிப்பாக சீனாவில் 14 வயதிற்குட்பட்ட சில குழந்தைகளை பாதித்து இருந்தாலும், இது அந்நாட்டு மருத்துவ சமூகத்தால் கடுமையான அச்சுறுத்தலாக பார்க்கப்படவில்லை என்பது முக்கிய கருத்தாக பார்க்கப்பட்டது.
இந்தியாவில் பொதுமக்கள் கலக்கம் அடைய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளதால் தற்போதைய ஏற்ற இறக்கம் சுகாதார பயத்தை விட உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார கவலைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.குறிப்பாக இன்றைய அமெரிக்க பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை 2024-25 கான பொருளாதார வளர்ச்சி, ரிசர்வ் வங்கியின் கணிப்பான 6.6 சதவீதத்தை விட சற்று குறைவாக 6.4 சதவீதமாக இருப்பதும் இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டு இது 8.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் 2025-26 நிதியாண்டில் விமானப் போக்குவரத்து, சேவைகள் மற்றும் ஜிஎஸ்டி வசூல் ஆகியவை வளர்ச்சி அடையும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் 6.8% வளர்ச்சியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான உலக வங்கியின் அறிக்கையும் இதற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அதன்படி, உலகளவில் நிலைமை சவலாக இருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் வலுவாகவே இருப்பதாகவும், இதனால் இடைப்பட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது
மேற்கண்ட காரணங்களால்,இந்த குறுகிய கால நிலையற்ற தன்மையை மனதில் கொண்டு முதலீட்டாளர்கள் அவர்கள் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களின் அடிப்படைகளில் கவனம் செலுத்தி பொறுமையாகவும் நிதானமாகவும் தங்கள் முதலீடுகளை செய்யலாம் என்று கருதுகின்றனர் நிதி ஆலோசகர்கள் மேலும் இந்த முதலீடுகள் நீண்ட கால முதலீடுகளாக இருப்பின் மேலும் வளர்ச்சி அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 4 வங்கிகளுக்கு அபராதம் விதிப்பு; 10 நிறுவனங்களின் உரிமம் ரத்து - அதிரடி காட்டிய ரிசர்வ் வங்கி - ஏன்?