இந்திய நாட்டு உணவுகளில் பெரும்பாலும் கொத்தமல்லி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்காலத்திலிருந்தே கொத்தமல்லியை பல்வேறு மருத்துவ பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். கோரியன்டர் சட்டைவம் என்று ஆங்கிலத்தில் அழைக்கக் கூடிய இந்த கொத்தமல்லியில் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்ட்கள், நார் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குடலில் ஏற்படும் புற்று நோய்களை தடுக்கும் பண்பு கொண்டவையாக உள்ளது. மேலும், மருத்துவத் துறை மேற்கொண்ட ஆராய்ச்சியில் மனிதனுக்கு நன்மை பயக்கும் எண்ணற்ற வேதிப்பொருள்கள் இதில் அடங்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக லினலூல் என்ற ஃபைட்டோகெமிக்கல்ஸ், ஆன்டி ஸ்டெரால், ஃப்லவனாய்ட்ஸ் உள்ளிட்டவைகள் இதயத்திற்கு நன்மை செய்யும் ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் கொண்டவையாக உள்ளன என்று அதில் தெரிவித்துள்ளது. இந்த லினலூல் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கக்கூடிய பண்புகள் நிறைந்துள்ளன. மேலும், இரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்ந்து அடைப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் பண்பும் உள்ளது. இரத்த அழுத்தத்தை குறைத்து கார்டியாக் அரெஸ்ட் போன்ற உயிரையே பறிக்கச் செய்யும் நிகழ்வுகளில் இருந்து நம் இதயத்தை பாதுக்காக்கும் பண்புகள் கொண்டவையாக உள்ளன.
இதையும் படிங்க: ரத்தக் குழாய் அடைப்பு இருக்கா? அப்போ இந்த ஒரு ஜூஸ் போதும்...

கொத்தமல்லி தேநீர் ;
தண்ணீர் - 2 டம்பளர்
கொத்தமல்லி விதை - 2ஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்
சுக்கு - 1/4 ஸ்பூன்
நாட்டுச்சக்கரை - தேவைக்கேற்ப
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, பாதியாக உடைத்த கொத்தமல்லி விதைகள், சுக்கு பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அதில் நாட்டுச் சக்கரை சேர்த்து வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகவும். இதனை தினமும் ஒரு முறை பருகுவது நல்லது. தேவைப்பட்டால் புதினா அல்லது துளசி இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

கொத்தமல்லி இலை ஜூஸ் ;
கொத்தமல்லி இலை - ஒரு கை பிடி அளவு
மோர் - 1 டம்பளர்
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
ஒரு மிக்சி ஜாரில் நன்றாக சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லி இலைகள், மோர், இஞ்சி, சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து பருகவும். இதிலுள்ள நார் சத்துக்களை நாம் எடுத்துக் கொள்வது குடலுக்கு நல்லது, எனவே வடிகட்டி குடிப்பதை முடிந்தளவு தவிர்க்கவும். தேவைப்பட்டால் புதினா இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
கொத்தமல்லி விதையில் குறைவான வைட்டமின்கள் அதிகமான மினரல்கள் உள்ளன. ஆனால், அதன் இலைகளான கொத்தமல்லி இலையில் அதிகமான வைட்டமின்களும் குறைவான மினரல்களும் உள்ளன. குறிப்பாக வைட்டமின் A, C, K மிகுதியாக உள்ளன. இது கண், சரும ஆரோக்கியம், எதிர்ப்பு சக்தி, மற்றும் வைட்டமின் K இரத்தம் உரைதல் தன்மையை பாதுகாக்கிறது. எனவே கொத்தமல்லி இலைகளை நாம் எடுத்துக் கொண்டால் மேற்கூறிய பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். கொத்தமல்லி இலையில் மிகவும் குறைந்த அளவிலே நார் சத்துக்கள் உள்ளன. ஆனால் கொத்தமல்லி விதையில் ஏராளமான நார்ச் சத்துக்கள் அடங்கியுள்ளன.

விதைகளில் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளதால் அது எலும்புகள் உறுதியடைந்து வலுவடையவும், இரத்த சோகை ஏற்படாதவாறும் பாதுகாக்கிறது. நுண்சத்துக்களான சிலேனியம், பாஸ்பரஸ், ஸின்க், பொட்டாசியம் விதைகளில் நிறைந்துள்ளது. எனவே இது வயதானவர்கள் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.

கொத்தமல்லி இலைகளில் தாதுக்கள் குறைவாகவும் நீர் சத்து அதிகமாகவும் உள்ளது. இதனை தொடர்ந்து உணவுகளில் சேர்த்து வந்தால் நம் தோல்கள் விரைவில் வயதான தோற்றம் பெறாமல் தடுக்க உதவுகிறது. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் வயிற்றுப் புண் மற்றும் குடல் சார்ந்த புற்றுநோய்கள், ஆண்களுக்கு வரக்கூடிய ப்ரோஸ்டேட், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்று நோய் உள்ளிட்டவைகளில் இருந்து பாதுகாக்கிறது.
சக்கரை வியாதி உள்ளவர்கள் கொத்தமல்லி இலை மற்றும் கொத்தமல்லி விதையினை கசாயம் அல்லது தேநீராக எடுத்து வரும் போது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை குறைத்து ஆரோக்கியமாக வாழ வகை செய்கிறது.சிறுநீர் தொற்றுக்கள், வயிறு சார்ந்த தொற்றுக்களை களைய கொத்தமல்லி விதை மற்றும் இலை நல்ல பயனைத் தருகிறது.
எனவே கொத்தமல்லி இலை மற்றும் விதைகளை தேர்ந்தெடுத்து பார்த்து வாங்கி அதன் முழு மருத்துவ பயன்களை பெற்று பலனடைவோம்.
இதையும் படிங்க: நீண்ட நாள் வாழ வேண்டுமா ? உங்க இதயம் என்ன சொல்லுது...