2025-26ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். நாட்டின் வரிவருவாய் அதிகரித்து நிதிப்பற்றாக்குறை குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் பற்றாக்குறை 4,8 சதவிதமாக உள்ளதாகவும், வரும் நிதியாண்டில் 14.82 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாட்டின் மூலதன செலவீனம் 10.18 லட்சம் கோடியாக இருக்கும்.

மொத்த ஏற்றுமதியில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்கு 45 சதவிதமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஏழரை கோடி தொழிலாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட உள்ளதாகவும், சிறுகுறு நிறுவனங்களுக்கு கடன் வரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேபோன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ரூ.20 கோடி வரையிலான கடனுக்கு மானியம் அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 2028-ம் ஆண்டு வரை ஜல்ஜீவன் திட்டம் நீட்டிப்பு.. அரசுப்பள்ளிகளுக்கு இலவச இணையவசதி...நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!
நகர்ப்புற மேம்பாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் மாநிலங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்குள் 2000 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புற்றுநோய் தடுப்பு சிகிசை மையம் ஏற்படுத்தப்பட்டு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்ற உன்னத அறிவிப்பையும் அவர் வழங்கி உள்ளார். அதேபோன்று நாடு முழுவதும் கூடுதலாக 10000 புதிய மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையான செய்தியையும் நிர்மலா வெளியிட்டுள்ளார். புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக நீக்கப்படுவதாக மகிழ்ச்சிகரமான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

செயற்கை நுண்ணறிவுத் துறைக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் ஏஐ திறன் மேம்பாட்டு மையம் உருவாக்கப்படும் என்பதும் நிர்மலாவின் அறிவிப்புகளில் ஒன்று.
2047-ம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 கிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 5 சிறிய மற்றும் நடுத்தர அணு உலைகளை உருவாக்க 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 50 சுற்றுலாத் தலங்கள் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்றும் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த HEAL INDIA என்ற திட்டம் உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். முத்ரா கடன் மருத்துவ துறைக்கும் விரிவுபடுத்தப்படும் என்பதும் முக்கியமான அறிவிப்புகளில் ஒன்றாகும்.
செல்போன், மின்வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்க வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று எல்இடி டிவி பேனல் இறக்குமதி வரி 10 சதவிதத்தில் இருந்து 20 சதவிதமாக உயர்கிறது. இதன்மூலம் எல்இடி டிவிக்களின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விண்வெளித்துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் திட்டம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பழங்குடி பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 கோடி கடன்.. நிர்மலா சீதாராமனின் அசத்தல் அறிவிப்பு..!