வழக்கமாக பொதுமக்கள், ஏழை, எளிய டிரைவர்கள் பலபேர் தங்களது வீடுகளில் தங்களின் வாகனத்தை நிறுத்துவதற்கு இடமில்லாத காரணத்தால் இரவில் ரோட்டோரத்தில் தங்களது வாகனத்தை நிறுத்திச் செல்வர். அதுபோல மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் தொழிலாளர்கள், வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழிலாளர்கள் தங்களது கடைக்கு வரும் வாகனத்தையும் இதேபோல் தான் வெளியில் நிறுத்தி வைத்துவிட்டு செல்வது வழக்கம். இவ்வாறு மதுரை செல்லூர் பகுதியில் நேற்றிரவு தங்களது ஆட்டோ மற்றும் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றோருக்கு இன்று அதிகாலை பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

செல்லூர் பகுதியை சேர்ந்த 17-வயது சிறுவன் ஒருவன், நள்ளிரவு 3 மணி அளவில் JCB வாகனத்தை எடுத்து சென்று ஓட்டியுள்ளான். செல்லூர் 50-அடி சாலையில் இருந்து கண்மாய்கரை சாலை வரை அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டி சென்றுள்ளான் அப்போது அந்த பகுதியில் சாலையோரம் மற்றும் வீட்டின் முன்பாக மற்றும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஷேர் ஆட்டோக்கள், பைக்குகள் என 25க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து நொறுக்கியதில் வாகனங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளது.
ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்ததால், எளிய மக்கள் தங்களது வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் ஆட்டோ பெயிண்ட் அடிக்கும் நிறுவனங்களின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்ட 15 க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளதால் ஆட்டோ உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: இங்க திமுக ஜெயிக்க இந்த ஒன்ன மட்டும் செஞ்சே ஆகனும்... உ.பி.க்களை அதிரவிட்ட பிடிஆர்...!

மேலும் அந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள கடை ஒன்றையும் இடித்துள்ளான். அங்கு இருந்த மரத்தை சாய்த்து JCP மூலம் இடித்து சாய்த்து கடையின் படிக்கட்டுகளை உடைத்துள்ளான். சாலையோரத்தில் இருந்த கடைகள் மீதும், வாகனங்கள் மீதும் அடுத்தடுத்து மோதி வெறியாட்டம் நடத்தி உள்ளான். கட்டிடங்கள், மரம், பேரிகார்டுகள் என சாலை முழுவதும் JCB இயந்திரத்தை வைத்து கபளீகரம் செய்த சிறுவனை அங்கு இருந்த பொதுமக்கள் துரத்தி சென்ற பிடிக்க முயன்றனர்.
ஆனால் சிறுவன் தொடர்ந்து JCB வாகனத்தை அங்கும் இங்கும் இயக்கிவாறு வாகனங்களை சேதப்படுத்தியதால், மக்களால் சிறுவனை நெருங்க முடியவில்லை. இறுதியில் சிறுவன் ஆட்டோக்கள் மீது மோதி நின்ற நிலையில், அவனை ஜேசிபி வாகனத்தில் இருந்து கீழே இறக்கிய பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் மது.? கஞ்சா.? போன்ற எந்த வகையான போதைப்பொருளையாவது பயன்படுத்தினானா? இது போன்ற செயல்களில் ஈடுபட்ட காரணம் என்ன? JCB வாகனத்தை இயக்க தெரிந்தவரா.? என்பது குறித்தும் செல்லூர் காவல்நிலைய காவல்துறை விசாரணையை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையே ஷேர் ஆட்டோக்களை JCB இயந்திரம் மூலமாக நொறுக்கும் சிறுவன் குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. செல்லூர் பகுதியில் இரவு நேரங்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், சிறுவர்கள், மற்றும் இளைஞர்களுக்கு அதிக அளவிற்கு கஞ்சா , போதை பவுடர் போன்ற போதைப்பொருட்கள் எளிதாக கிடைப்பதாலும் இதுபோன்று குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சிறுவன் வீட்டின் முன்பாக சண்டையிட்டு கொண்டிருந்த நிலையில் திடிரென JCB வாகனத்தை எடுத்துவந்து இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர்..! ரயிலில் சிக்கி உயிரிழந்த சோகம்..!