திருவள்ளூர் அருகே தனியார் செங்கல் தொழிற்சாலையில் நான்கு மாத குழந்தை உள்பட மூன்று பேர் அடுத்தடுத்து நாட்களில் இறந்ததால் பதட்டமும்,பரபரப்பவும் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே மேலக்கொண்டையார் கிராமத்தில் அன்னை செங்கல் தொழிற்சாலை என்ற தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.. இந்த கொமக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் இந்த தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த செங்கல் தொழிற்சாலையில் ஒடிசா சத்தீஷ்கர் பீகார் போன்ற வட மாநிலங்களில் சேர்ந்த 350 க்கு மேற்பட்ட தொழிலாளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் தங்கி பணியாற்றி வருகின்றனர்
இந்நிலையில்,கடந்த நான்கு நாட்களுக்கு முன்னாள் நான்கு மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென இறந்து போனது. இந்நிலையில்,நேற்று பத்துக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,பேதி ஏற்பட்டது. இதில்,உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமகிருஷ்ண தியாகு(வயது65) என்பவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று பரிதாபமாக பலியானார். இந்நிலையில்,இன்று மாலை ஹைதர் சண்டா(வயது52) என்பவர் செங்கல் தொழிற்சாலையிலேயே பரிதாபமாக பலியானார்.
இதையும் படிங்க: கேட்டது கரும்பு விவசாயி சின்னம்.. கிடைத்தது மைக் சின்னம்.. நாதக ஹேப்பி அண்ணாச்சி!

திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தன் பின்னர்,இறந்தவர் உடலை வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பப்பி (பொறுப்பு)தலைமையில் போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,சிலருக்கு வாந்தி,பேதி ஏற்பட்டது.தகவல் அறிந்து ஈக்காடு வட்டார மருத்துவ அலுவலர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் தனியார் செங்கல் தொழிற்சாலைக்கு வந்து வாந்தி,பேதி ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையை அளித்தனர்.

ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ரவி,திருவள்ளூர் தாசில்தார் ரஜினிகாந்த்,வருவாய் ஆய்வாளர் பொன்மலர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான்கு மாத குழந்தை இறந்தது.நேற்றும்,இன்றும் அடுத்தடுத்து இருவர் இறந்ததால் இக்கிராமத்தில் பதட்டமும்,பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வெங்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அடுத்தடுத்து இந்த செங்கல் தொழிற்சாலையில் இறப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
உயிரிழப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருவதை கண்டு மற்ற தொழிலாளர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு இன்றைய தினம் புறப்பட்டு சென்றனர்
இதையும் படிங்க: விஜய் சொன்னது போலவே நடந்துடுச்சு... கார்த்தி சிதம்பரம் விமர்சனத்தை தொடங்கி வைச்சுட்டாரு!