ஆந்திராவில் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில், பெனுகொண்டா அருகே தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 900 இன்ஜின்கள் திருடப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது, கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டின் இறுதியில் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதலில் இந்தப் பிரச்சினை குறித்து, முறையாக புகார் பதிவு செய்யத் தயங்கிய கியா நிர்வாகம், போலீசாரை அணுகி அதிகாரப்பூர்வமில்லாத முறையில் இதனை விசாரிக்கக் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என போலீசார் மறுத்துள்ளனர்.

இதன் காரணமாக கடந்த மாதம் முறையாக காவல் நிலையத்தில் கியா நிர்வாகம் சார்பில் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்ற வருகிறது. ஆந்திராவில் செயல்படும் இந்த தொழிற்சாலைக்கான இன்ஜின்கள் சென்னையில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகின்றன. சென்னையில் தயாரிக்கப்படும் கார் எஞ்சின்கள், சாலை மார்க்கமாக ஆந்திரா எடுத்துச் செல்லப்படுகின்றன.
எனவே, இன்ஜின்களைக் கொண்டு செல்லும் வழியில் இந்த திருட்டு நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவங்கினர். ஆனால், இன்ஜின்கள் கியா தொழிற்சாலைக்கு சென்ற பிறகே, ஆவணங்களில் மோசடி செய்யப்பட்டு இன்ஜின்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்கள்.. அலறிய 4 வயது சிறுவன்.. ஆந்திராவில் அரங்கேறிய சோகம்..!

மேலும், இது முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்களின் செயலாக இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியா முழுவதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தின் எஸ்பி ரத்னா தெரிவித்துள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், திருடு போன 900 இன்ஜின்களும் ஒரே கட்டத்தில் திருடு போகவில்லை என தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு கட்டமாக 2020ம் ஆண்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது. ஆனால், இந்தத் திருட்டினால் தொழிற்சாலையின் நடவடிக்கைகளிலோ, கார்கள் தயாரிப்பிலோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கியா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், தேவைக்கு ஏற்ப 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை கார்களை கியா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தத் திருட்டினால் அதில் எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல கார் நிறுவனமான கியா கார் தயாரிப்பு நிறுவனத்தில் 900 கார் எஞ்சின்கள் திருடப்பட்டுள்ள செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வழிப்பறியில் ஈடுபட்ட கவுன்சிலர்.. ஆந்திராவில் தங்க பிஸ்கட்கள் அபேஸ்.. போலீசார் அதிரடியால் 4 பேர் கைது..!