ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு செக் வைக்கும் விதமாக இருவர் செயல்பாடு உள்ளதாக பேசிக்கொள்கிறார்கள். இது சிக்கலை உண்டாக்கும் என்கின்றனர்.
ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைய போகிறார் என்று ஒரு கருத்தை உருவாக்கி அதை விஜய்யையும் நம்ப வைத்துள்ளனர் இருவர் கும்பல். மற்றவர்களும் இணையவில்லை என்றும் கூறிவந்த நிலையில் விஜய்க்கு விஷயம் தெரிந்து ஆதவ் அர்ஜுனை அழைத்து 1 மணி நேரம் பேசினார். இந்த பேச்சின்போது பல விஷயங்களை ஆதவ் அர்ஜுனா கோடிட்டு காட்ட விஜய் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கட்சிக்கு பணியாற்ற கேட்டுக்கொண்டார். அப்போது ஆதவ் தரப்பில் இரண்டு கண்டிஷன்கள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒன்று ஆதவ் வெளியிலிருந்து தன் அமைப்பு மூலம் வேலை செய்வது. இதற்காக ஒரு தொகையும் வேண்டாம் என்று சொன்ன ஆதவ் தான் செலவழித்துக்கொள்வதாக கூறியதை கேட்டு விஜய் சந்தோஷப்பட்டாராம்.

மற்றொன்று கட்சிக்குள் வந்தால் உரிய கவுரவமான பதவி கொடுக்க வேண்டும். அது தனது பணிக்கு இடையூறாக இருக்க கூடாது. தனக்கு ரிப்போர்ட்டிங் அத்தாரிட்டி விஜய்தான் என்று கூறியுள்ளார். இதற்கு விஜய் பேசிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா வெளியில் இருக்கட்டும்...கட்சிக்குள் வேண்டாம்...விஜய்க்கு நெருக்கடி தரும் அந்த இருவர்
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவை கட்சிக்குள் கொண்டுவரக்கூடாது என அந்த இருவர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுள்ளனர்.
அப்படியே அவர் கட்சிக்குள் வந்தாலும் தங்கள் இருவரின் கட்டுப்பாட்டில் தான் அவர் இயங்க வேண்டும், தாங்கள் சொல்லும் வழிமுறைகளில் தான் செயல்பட வேண்டும், தங்களை மீறி செயல்படக்கூடாது என்ற கண்டிஷனையும் கட்சிக்குள் வைத்துள்ளனர். இதற்கு விஜய் தரப்பு ஒப்புக்கொண்டதா? இல்லையா? என்பது தெரியவில்லை. அதே நேரம் ஜான் ஆரோக்கியசாமி ஒரு வியூக வகுப்பாளராக இதுவரை பெரிய அளவில் எதுவுமே செய்யாத நிலையில் திமுகவுக்குள் பல ஆண்டுகள் வியூக வகுப்பாளராக வெற்றிகரமாக இரண்டு மூன்று தேர்தல்களை நடத்திக் காட்டிய ஆதவ் அர்ஜுனா எப்படி அவருடைய சொல்படி நடப்பார். இதற்கு பருத்தி மூட்டை கொடவுனிலேயே இருந்திருக்கலாமே என்று மற்ற கட்சி நிர்வாகிகளும் பேசி உள்ளனர்.
அதே நேரம் முதல் நாள் ஆதவ் அர்ஜுனா நிறுவனம் கட்சிக்காக பணியாற்ற ஒரு ஒப்பந்தத்தை போட்டு ஆதவ்வுடன் இணைந்து செயல்படுங்கள் என்று விஜய் சொல்லிவிட்டு சென்றார். இதற்குப் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை ஜான் ஆரோக்கிய சாமியும், புஸ்ஸி ஆனந்தும் தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு ஆதவ் அர்ஜுனா தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை கட்சிக்குள் உருவாக்கிக் கொண்டே வந்தனர்.

இருவரும் கட்சிக்குள் யாரையும் அனுமதிக்காமல் கட்சி உறுப்பினர்களை மட்டுமே வைத்துக் கொண்டு கட்சியை நடத்தலாம் என்று ஓராண்டு காலமாக நடத்தியதால், எந்த அளவுக்கு கட்சி பின்னடைவை சந்தித்தது என்று மற்ற நிர்வாகிகள் வருத்தப்பட்டு வந்த நிலையில், மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே புதிதாக வரும் ஆதவ் அர்ஜுனாவும் செயல்பட வேண்டும் என்றால் புதிதாக என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது? இது தலைவருக்கு தெரியுமா? தலைவர் இதை எப்படி ஏற்றுக் கொள்வார் என்றெல்லாம் கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மாற்று கட்சிகளிலிருந்து வருபவர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஆதவ் பேசியதை அறிந்த இருவர் உடனடியாக தங்களுக்கு வேண்டிய நபர்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதில் முதற்கட்டமாக அதிமுகவின் சமூக ஊடக நிர்வாகி நிர்மல் குமார் தவெகவுக்குள் வரவழைக்கப்பட்டு துணை பொது செயலாளர் பதவியும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது ஒருவேளை 2026 இல் அதிமுகவுடன் கூட்டணி போகும் நிலை ஏற்படுமாயின் அது அதிமுகவிற்கு கோபத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை தெரிந்தே புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டுள்ளதாக மற்ற நிர்வாகிகள் கருதுகின்றனர். காரணம் புஸ்ஸி ஏதோ ஒரு பின்னணியில் தான் இது போன்ற செயலில் ஈடுபடுகின்றார், இதுபோன்று அதிமுகவை ஆத்திரமூட்ட செய்ய வேண்டும் என்கின்ற அடிப்படையில் ஆதவ்வின் வியூகத்தை உடைக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும் உடனடியாக அதிமுக நிர்வாகி இணைக்கப்பட்டு இருக்கிறார் என்றும் மற்ற நிர்வாகிகள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.
இன்னொரு புறம் கட்சியில் நியமிக்கப்பட்டுள்ளவர்களில் பல பேர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது, குறிப்பாக தங்களுக்கு வேண்டிய செய்தி தொடர்பாளர்களுக்கு மட்டும் புஸ்ஸியும், ஜான் ஆரோக்கிசாமியும் பொறுப்பு கொடுத்துள்ளனர், கட்சிக்காக பாடுபட்டு வருமானம் இன்றி தவித்து வந்த ஜெகதீசன் போன்றவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்தும் நிர்வாகிகளிடையே முணுமுணுப்பாக உள்ளது இந்த நிலையில் தான் நேற்று ஆதவ் கட்சியில் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் என்ற புதிய பொறுப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அவர் கேட்டபடி அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய செயல்பாட்டின் படி யாருடைய இடையூறு இல்லாமல் ஆதவ் அர்ஜுனா கட்சியின் வியூகத்தை வகுத்து கொண்டு செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் உடனடியாக வந்த அறிக்கை பலரையும் ஆச்சரியம் மூட்டி உள்ளது.

குறிப்பாக அந்த அறிக்கையின் இறுதி பக்கத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டுதலின்படி ஆதவ் அர்ஜுனா செயல்பட வேண்டும் என்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியின் வியூக உத்திகளை ஏற்றுக் கொண்டு அவர் சொல்கிறபடி செயல்பட வேண்டும் என்றும் வரிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இது போன்ற வார்த்தைகள் வேண்டுமென்றே ஆதவ் அர்ஜுனாவை சூடேற்றும் விதமாக சேர்க்கப்பட்டுள்ளதாக மற்ற நிர்வாகிகள் கருதுகின்றனர். காரணம் இவைகள் அமல்படுத்தப்படுமாயின் ஆதவ்வினால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மீண்டும் ஜான் ஆரோக்கியசாமியும், புஸ்ஸி ஆனந்தும் தங்கள் இஷ்டப்படி கட்சியை நடத்துவார்கள், அவர்கள் தங்கள் இஷ்டப்படி கட்சியை எப்படி நடத்தினார்கள் என்பதை ஓராண்டாக கட்சியின் நடைமுறையை பார்த்தாலே தெரியும், புதிதாக மாற்றம் வேண்டும் என்பதற்காக ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இணைத்துவிட்டு இவர்கள் சொல்படி அவர் கேட்க வேண்டும் என்று சொன்னால் முதலில் ஆதவ் அர்ஜுனாவின் தகுதிக்கு ஜான் ஆரோக்கியசாமி அவ்வளவு அனுபவம் பெற்றவர் அல்ல, இரண்டாவதாக தான் செயல்படுவதற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்ட பதவியை கேட்டு பெற்றார். ஆனால் அதை மீறி இந்த அறிக்கை வந்துள்ளது விஜய்க்கு தெரியுமா? என்கிற கேள்வியை தவெகவின் மற்ற நிர்வாகிகள் வைக்கின்றனர்.
காரணம், வேண்டும் என்றே இருவரும் சில சரத்துகளை சேர்த்து விஜய்யிடம் கையெழுத்து வாங்கி வெளியிட்டிருக்கலாம், இதன் மூலம் மீண்டும் ஒரு குழப்பத்தை கட்சிக்குள் வந்துள்ள ஆதவ் அர்ஜுனாவை சீண்டிப் பார்த்து அவரை செயல்பட விடாமல் செய்வதற்காகவும் இவ்வாறு அறிக்கை வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர். முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகிவிடக்கூடாது இதில் உடனடியாக விஜய் தலையிட்டு உரிய முடிவெடுக்க வேண்டும் என்று கட்சியினர் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். விஜய் உரிய முடிவு எடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்
இதையும் படிங்க: இத்தனை பேர் தவெகவில் இணைய காத்திருந்தார்களா? முட்டுக்கட்டை போட்ட இருவர்...