விரைவில் அடுத்த பயணம் குறித்து அறிவிப்பேன் என்று பாஜகவிலிருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார் கட்சியில் இருந்து விலகியுள்ளார். தன்னுடைய விலகல் குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் இணைந்தேன். ஆனால் தாயகம் வேறு, தமிழகம் வேறு என்ற மாற்றாந்தாய் மனப்போக்கு என்னை இன்னமும் பாஜகவில் இருக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியது. தேசியமும், தெய்வீகமும் குறுகிய வட்டத்தில் சுருங்கிப் போவதில் உடன்பாடு இல்லை.

என்னைப் பொருத்தவரை மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு இயங்க முடியவில்லை. என்னை சிறப்பாக இயக்க பாஜக தவறிவிட்டது. பெண்களுக்கு முன்னேற்றம் தரும் தலைமை என்ற பயணத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டேன்.
நிதி கொடுக்க மாட்டோம் என்னும் போக்கை ஆணவமாகவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவுமே பார்க்கிறேன். இதற்கான எதிர்ப்பை பாஜக மாநிலத் தலைவர் முன்னெடுத்திருக்கலாம். ஆனால், அவரே மத்திய அரசின் முடிவுக்கு உடன்படுகிறார். விலகுவதற்கான எவ்வித அழுத்தமும் இல்லை. விரைவில் அடுத்த பயணம் குறித்து அறிவிப்பேன்” என்று ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக ரஞ்சனா, திமுக அல்லது தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை ஒழுங்கா செயல்படுத்துனது குத்தமா? - கொதித்தெழுந்த செல்வப்பெருந்தகை...!