டெல்லியில் தோற்ற கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே அறிவுரை கூறினார். ஆனால், மோடி அரசின் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? என்று சஞ்சய் ராவத் கோபமடைந்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலரும், அரவிந்த் கேஜ்ரிவாலின் முன்னாள் வழிகாட்டியுமான அன்னா ஹசாரே, "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் நல்ல குணம், சிறந்த யோசனைகள் இருக்க வேண்டும். தூய்மையான நடத்தை உள்ளவராக இருக்க வேண்டும். இதை நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன். ஆனால், அவர்களுக்கு (ஆம் ஆத்மி) அது புரியவில்லை. அவர்கள் மதுபான ஊழலில் சிக்கிக்கொண்டனர். இதனால் அவரது (அரவிந்த் கெஜ்ரிவால்) பிம்பம் சிதைந்தது. அதனால்தான் தேர்தலில் அவர்களுக்கு வாக்குகள் குறைவாகவே கிடைக்கின்றன.

நற்குணங்களின் முக்கியத்துவம் குறித்து அவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) பேசுவதையும், மதுபான ஊழல் குற்றச்சாட்டில் அவர் சிக்கியதையும் மக்கள் பார்த்தார்கள். அரசியலில், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். ஒருவர் தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். உண்மை எப்போதும் உண்மையாகவே இருக்கும். ஒரு கூட்டம் நடந்தபோது, நான் கட்சியின் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன் என்று முடிவு செய்தேன் - அன்று நான் விலகி இருந்தேன்," என்று தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: 2 லட்சம் வாக்குகளில் பாஜகவிடம், 26 இடங்களை இழந்த ஆம் ஆத்மி… மரண பயம் காட்டிய கேஜ்ரிவால் வேட்பாளர்கள்..!
இதற்கு பதிலடி கொடுத்துள்ள சிவசேனா தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் , ''டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்வியால் மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகிழ்ச்சியடைகிறார். கடந்த சில ஆண்டுகளில் மத்தியில் நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஹசாரே ஏன் மௌனமாக இருக்கிறார். மோடியின் ஆட்சியில் ஊழல் நடந்தபோது ஹசாரே எங்கே இருந்தார்? கெஜ்ரிவாலின் தோல்வியால் ஹசாரே மகிழ்ச்சியடைகிறார். நாடு சூறையாடப்படுகிறது. பணம் ஒரு தொழிலதிபரின் கைகளுக்குச் செல்கிறது.இத்தகைய சூழ்நிலையில் ஜனநாயகம் எவ்வாறு உயிர்வாழ முடியும்? இப்படிப்பட்ட நேரத்தில் ஹசாரேவின் மௌனத்தின் ரகசியம் என்னவாக இருக்கும்?

மகாராஷ்டிரா, டெல்லியில் வாக்காளர் பட்டியல்களில் இதேபோன்ற முறைகேடுகள் இருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளில் ஹசாரே அமைதியாக இருக்க ஏன் முடிவு செய்தார். இதேபோன்ற புகார்கள் ஹரியானாவிலும் உள்ளன. இவை பீகார் தேர்தலிலும் காணப்படும். 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தேர்தல்களில் அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.சூழ்ச்சி மற்றும் பண பலத்தின் மூலம் வெற்றி அடையப்படுகிறது'' என்று அவர் குற்றம் சாட்டினார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் 48 இடங்களை வென்று பாஜக ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இதையும் படிங்க: கேஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்ட தலைவர்களை வீழ்த்திய காங்கிரஸ்... வாக்குகளை பிரித்ததால் தோல்வி