டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்ற கொலிஜியம் இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பார் கவுன்சிலைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான நீதிபதிகள் குழு 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தனர்.

மேலும், இந்த விவகாரம் முடியும்வரை நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு வழக்குகள் ஏதும் ஒதுக்க வேண்டாம் என்று கூறி அவர் இதற்கு முன் பணியாற்றிய அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் இடமாற்றம் செய்தது.
இதையும் படிங்க: பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பலாத்கார முயற்சி அல்ல.. அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!
இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் நீதிபதி வர்மாவை அலகாபாத்துக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். அது மட்டுமல்லாமல், ஏற்கெனவே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக வர்மா இருந்தபோது அளித்த தீர்ப்புகள் அனைத்தையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், இந்த நீதிமன்றத்திலிருந்து வர்மாவை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றும்வரை காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.

அலகாபாதா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, பார் கவுன்சில் கூட்டமைப்பு எழுதிய கடிதத்தில் “ அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பணியாற்றியபோது அவர் அளித்த அனைத்து தீர்ப்புகளையும் நீதிமன்றம் மறுஆய்வு செய்து, மக்களின் நம்பிக்கையை மீட்க வேண்டும், மக்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையைக் காக்க வேண்டும். இது எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும், ஏனெனில் நீதிபதிகள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. நம்முடைய நீதித்துறை, நீதிவழங்கல் முறை மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை, மதிப்பு இருக்கிறது. ஏனென்றால் நீதித்துறையில் இருப்போர் நேர்மையானவர்கள், கடின உழைப்பாளர்கள், அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டவர்கள். நீதிபதிகள் மீது முழு மரியாதை இருக்கிறது.

நீதியின் நதியின் இந்த ஓட்டத்தை மாசுபடுத்துபவர்கள் மிகச் சிலரே, தேசத்தின் சட்டப்படி யஷ்வந்த் வர்மாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்து பாதுகாப்புகளையும் திரும்பப் பெறுவதன் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலாகாபாத் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் அனில் திவாரி கூறுகையில் “ உச்ச நீதிமன்றம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்தபின், குறிப்பாக நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வாக்குமூலத்தை படித்தபின், அவரின் கருத்தை நிராகரித்துள்ளது. அவர் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்து முதல்தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அவரை சிபிஐ, அமலாக்கப்பிரிவு மூலம் விசாரிக்க வேண்டும். ஆனால், நீதிபதி வர்மா தனக்கும் இந்தப் பணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தொடர்ந்து மறுப்பது துரதிர்ஷ்டமானது, மரியாதையுடன் பதவி விலகுவதற்குப் பதிலாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். சட்டம் தனது கடமையைச் செய்யும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஷாஹி ஜமா மசூதி ஒரு சர்ச்சைக்குரிய கட்டடம்... அதிரடியாக திருத்திய உயர் நீதிமன்றம்..!