ஆன்லைன் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது அமேசான் மற்றும் பிளிப்கார்ட். இந்த நிறுவனங்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாகப் பெறமுடியாத பொருட்கள் எதுவுமே இல்லை என்றே கூறலாம். கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்களை வைத்துள்ள இந்த நிறுவனங்களின் கிடங்குகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ.36 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்பிலான தரச்சான்று அளிக்கப்படாத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிஐஎஸ் சட்டம் 2016 மீறப்படுவதாக இந்திய தரநிர்ணய அமைவனத்துக்கு புகார்கள் வந்த நிலையில், இந்திய தரநிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் அமேசான் செல்லர் சர்வீஸ் மற்றும் ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஆட்குறைப்பில் அமேசான்..! 14 ஆயிரம் மேலாளர்களை வேலையிலிருந்து நீக்குகிறது..!

பொன்னேரி அருகே துரை நல்லூர் கிராமத்தில் உள்ள அமேசான் செல்லர் சர்வீஸ் கிடங்கில் தரச் சான்றளிக்கப்படாத, பல தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறிய காப்பிடப்பட்ட குடுவைகள் மற்றும் உணவு கொள்கலன்கள், உலோக குடிநீர் பாட்டில்கள், சீலிங் ஃபேன்கள், பொம்மைகள் இருந்தது தெரிய வந்தது. ஆகவே, பிஐஎஸ் தர முத்திரை இல்லாத, ரூ.36 லட்சம் மதிப்புள்ள 3,376 பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், செங்குன்றம் அருகே கொடுவள்ளியில் உள்ள ஃபிளிப்கார்ட் கிடங்கில் 286 குழந்தைகளுக்கான டயப்பர் பாக்கெட்டுகள், 26 எஃகு வாட்டர் பாட்டில்கள், 10 காப்பிடப்பட்ட ஸ்டீல் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் பிஐஎஸ் தரநிலை முத்திரை இல்லாமல் இருந்துள்ளன. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு நிறுவனங்கள் மீது இந்திய தர நிர்ணய அமைப்பு சட்டம் 2016-ன் கீழ் பி.ஐ.எஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத் தலைவர் பவானி தெரிவித்துள்ளார்.

இது போன்ற தரச் சான்று இல்லாமல் விற்பனை செய்யும் பொருட்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் தரமணியில் உள்ள பி ஐ எஸ் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறினார். அவ்வாறு அனுப்பப்படும் தகவல்களின் ஆதாரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உங்களுக்கு பச்சாதாபம் இல்லையா? தனியார் விமான நிறுவனத்தை கிழித்தெறிந்த நடிகை!!