ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். சந்திரபாபு நாயுடு வருகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாமி தரிசனத்திற்கு பின்னர் அவர் அங்குள்ள அன்னதான விடுதியில் அன்னதானத்திற்கு 44 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியதோடு குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பக்தர்களுக்கு சாப்பாடு பறிமாறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பதி ஏழுமலையானை நினைத்து வாழ்க்கையில் சென்று கொண்டிருக்கிறது. எனது பேரன், தேவான்ஷ் பிறந்த நாளில் எங்களின் குல தெய்வமான திருப்பதி ஏழுமலையானை சந்திப்பது வழக்கமான ஒன்று. எனது பேரன் பிறந்த நாளில்தேவஸ்தானத்தின் அன்னதான அறக்கட்டளைக்கு ஒரு நாள் செலவு தொகையாக 44 லட்ச ரூபாயை கொடுத்து அன்னதானம் செய்துள்ளேன். திருப்பதி மலையில் அன்னதான திட்டத்தை மறைந்த முதலமைச்சர் என்டி ராமராவ்தான் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: மசால் வடை, மசால் வடை தான்யா.. திருப்பதி அன்னபிரசாதத்தில் மசால் வடை... இன்று முதல் அமல்..!

தேவஸ்தானத்தின் பிராணதான திட்டத்தை தான் அமலுக்கு கொண்டு வந்தேன். சர்வதேச மருத்துவர்கள் திருப்பதிக்கு வந்து மருத்துவமனைகளில் சேவை செய்து ஏழுமலையானை வழிபட்டு செல்ல வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் என்மீது 23 கிளைமோர் கண்ணி வெடிகளால் குறி வைக்கப்பட்டது. அந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பது சாத்தியமில்லை. ஆனால் திருப்பதி ஏழுமலையான் தான் என்னை காப்பாற்றினார். இவ்வளவு பெரிய குண்டு வெடிப்பில் இருந்து நான் தப்பித்தேன் என்பதில் இருந்தே ஏழுமலையானின் மகிமை தெரியும். திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் மும்தாஜ், எம் ஆர், தேவலோக் ஆகிய பெயர்களில் அந்தந்த நிறுவனங்கள் 35.32 ஏக்கர் நிலத்தில் ஹோட்டல்களை கட்ட முந்தைய அரசு அனுமதி அளித்தது.

எனது தலைமையிலான அரசு அதனை ரத்து செய்துள்ளது. திருமலையில் ஏழு மலைகளுக்கு அருகில் எந்த விதமான வணிக நடவடிக்கையும் இருக்கக்கூடாது என்பதால் அனுமதியை ரத்து செய்தேன். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேற்று மதத்தவர்கள் பணியில் ஈடுபடாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வெளி மாநிலங்களில் கட்டப்படும் கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டுவதற்காக புதிய அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தப்படும். அந்த அறக்கட்டளைக்கு கிடைக்கும் நன்கொடையுடன், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு கிடைக்கும் நன்கொடையும் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருப்பதியில் குழந்தையை கடத்திய பெண்..! ஒரே மணி நேரத்தில் சிசிடிவியை வைத்து அல்லேக்காக மடக்கிய போலீஸ்..!