மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் இறுதிச்சுற்றில் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இம்முறை 1100 காளைகளும், 900 மாடுபிடிவீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. காலை 6:30 மணிக்கு தொடங்கிய போட்டி 11 சுற்றுகளுடன் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர். தற்போது 10வது சுற்று பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும், துணை முதல்வர் சார்பில் காரும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. காலை 6 மணி முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 41 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் போது மாடுபிடி வீரர்கள் 18 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 17 பேர் மற்றும் பார்வையாளர்கள் 6 பேர் காயமடைந்தனர். இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் மரணம்; 9 பேரின் நிலை என்ன?

இதனிடையே, மாடு மார்பில் குத்தியதில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரரான நவீன்குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். அவனியாபுரத்தில் முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கு முன்னதாக 10வது சுற்று போட்டியின் போது காளை உரிமையாளருக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இடையே களத்திலேயே மோதல் வெடித்தது. மாடுபிடி வீரரை மாட்டின் உரிமையாளர் அடித்ததால் பரபரப்பு நிலவியது. இதனால் இருவருக்குமே பரிசு கிடையாது என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இறுதிச்சுற்று ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்த போது, வாடிவாசலில் இருந்து தனது காளை வெளியே வரும் வேளை பார்த்து அதன் உரிமையாளர் மாடுபிடி வீரர்கள் மீது திருநீற்றை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாடு வருவது தெரியாமல் வீரர்கள் பெரும் அசம்பாவிதத்தில் சிக்கியிருக்கக்கூடும் என்பதால், திருநீறு வீசிய நபரை உடனடியாக கைது செய்யுங்கள் என காவல்துறைக்கு அங்கிருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: ஏலேய் மாட்ட விட்றா... களத்தில் வீரரை அடித்த காளையின் ஓனர் - களேபரமான வாடிவாசல்!