மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு, மதுரையில் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரகாஷ் காரத், மாணிக் சர்க்கார், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக, கேரள மாநிலத்தின் முன்னாள் கல்வி அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எம்.ஏ. பேபி என அழைக்கப்படும் மரியம் அலெக்ஸாண்டர் பேபி தேர்வுசெய்யப்பட்டார்.

கட்சியின் மத்தியக் குழுவில் 85 இடங்களில் 84 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இதில் 54 பேர் ஏற்கனவே மத்தியக் குழுவில் இருந்தவர்கள், 30 பேர் புதியவர்கள் என கூறப்பட்டுள்ளது.கட்சியின் புதிய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபியின் பெயரை முகமது சலீம் முன்மொழிய, அசோக் தாவ்லே வழிமொழிந்தார். இதன் பிறகு ஒரு மனதாக எம்.ஏ. பேபி புதிய பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க: அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மனம் குளிரும் பினராயி விஜயன்!

இதனிடையே, ஊடகம் ஒன்றில் எம். ஏ. பேபியின் வரலாறு தொடர்பான பத்திரிகைச் செய்தியில் அவருக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என கூறியதாக தெரிகிறது. இதற்கு பாஜகவின் அர்ஜுன் சம்பத் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

அதில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள M.A. பேபிக்கு ஒரு சென்ட் நிலம் கூட கிடையாது, சொந்த வீடு கூட கிடையாது, பரம ஏழை என பத்திரிக்கை செய்தி வெளியானது என்றும் பேபியின் மனைவியின் பெயர் லில்லி அலெக்சாண்டர், பல ஆயிரம் கோடி மதிப்பிலான கைரளி டிவி சேனலின் பார்ட்னர்... இவரின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உண்டு என்று கூறியுள்ளார்.

பேபியின் மகனும், மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆடம்பரப் பிரியர் என்று கூறிய அவர், பேபிக்கு ஒரு சென்ட் நிலம் கூட கிடையாதாம், சொந்த வீடும் கிடையாதாம், தமிழக ஊழல் ஊடகங்களின் செய்திகளின் லட்சணம் இதுதான் என்று கடுமையாக சாடினார்.
இதுதான் கம்யூனிஸ்ட்களின் உண்மையான முகம் என்றும் கேரள முதல்வர் பினராய் விஜயனின் மகள் கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் பல நிறுவனங்கள் நடத்தி வருகிறார் என்றும் கம்யூனிஸ்டுகளின் போலி வேஷம்...அதை விளம்பரம் செய்யும் தமிழக ஊடகங்களை புறக்கணிப்போம் எனவும் தனது பதிவில் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #FairDelimitation இந்தியாவின் ஆன்மாவுக்கு பாதிப்பு - பினராயி விஜயன்.. சிறப்பாக செயல்பட்டதற்கு தண்டனையா? - ரேவந்த் ரெட்டி..!