இதுதொடர்பாக வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "இந்து கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழில் கூட முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை அச்சிடுபவர்கள் மத்திய அரசை குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாகவும், சுதந்திர நூற்றாண்டான 2047ஆம் ஆண்டில் முதல் பொருளாதார நாடாகவும் மாற்றுவதுதான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இலக்கு ஆகும். அந்த லட்சிய இலக்கை அடையும் நோக்கில், தொலைநோக்குப் பார்வையுடன் 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
அனைத்துத் தரப்பினரும் பட்ஜெட்டை பாராட்டும் நிலையில், அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மாநிலங்களுக்கு இடையே பிரிவினையைத் தூண்டும் வகையில், கடும் வார்த்தைகளால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். ''விளம்பர மோகம் கொண்ட மத்திய அரசு. மக்கள் நலனில் அக்கறை காட்டுவதில்லை'' எனப் பழி சுமத்தியிருக்கிறார். இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே விளம்பர மோகம் கொண்ட அரசு என்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான்.

அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் கூட வைப்பதில்லை. எல்லா இடங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படங்கள்தான் உள்ளன.
இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் ஒரு வாழ்த்து கூறுவதில்லை. ஆனால், இந்து மத கோயில் கும்பாபிஷேகங்கள், திருவிழாக்களில் அழைப்பிதழ், விளம்பரங்களில் அந்தந்த கோயில்களின் சுவாமி படம் இருக்கிறதோ இல்லையோ, முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படம் பெரிதாக இருக்கிறது. பல நேரங்களில் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழா, திமுக பொதுக்கூட்ட அழைப்பிதழா எனப் பலர் குழம்ப வேண்டியிருக்கிறது.
மத்திய அரசு நிதி, மாநில அரசு நிதி என எந்த அரசு நிதியாக இருந்தாலும் அது மக்களின் வரிப்பணம். எந்த அரசு நிதி கொடுக்கிறதோ அந்த அரசின் முத்திரை இருப்பதில் என்ன தவறு? நியாய விலை கிடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியில் பெரும் பங்கு மத்திய அரசினை கொண்டுள்ளது. ஆனால், அனைத்து கடைகளிலும் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்திருக்கின்றனர். இது விளம்பர மோகம் இல்லையா.? மத்திய அரசு எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை அப்படியே செயல்படுத்தாமல் கலைஞர் வீட்டு வசதி திட்டம், கலைஞர் கைவினைஞர்கள் திட்டம், கலைஞர் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் என பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டுகிறது.
இதையும் படிங்க: ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... இது இந்திய அரசின் பட்ஜெட்டா.? பீகார் அரசின் பட்ஜெட்டா.? காங்கிரஸ் சும்மா கிழி.!

விளம்பர மோகம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எதற்கெடுத்தாலும் மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாண்டு, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. எனவே, மத்திய அரசை விமர்சிக்கும் முன்பு நாம் எப்படி எனக் கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொள்வது நல்லது" என்று வானதி சீனிவாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓல்டு ரிஜிமில் இருக்கலாமா.? நியூ ரிஜிமுக்கு மாறலாமா.? வருமான வரி விதிப்பில் எது பெஸ்ட்..?