வயதான மூதாட்டியின் வீட்டிற்கு வாடகை வந்த பாஜக நிர்வாகி அந்த வீட்டையே தனக்கு சொந்தமாக நினைத்து போலி ஆவணங்களை தயாரித்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உதவி என்ற பெயரில் மோசடி:
தமிழ்நாடு மின் துறையில் ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் 75 வயதான தேவிகா ராணி. திருமணமாகாத இவர் சென்னை கே.கே.நகர் பகுதியில் வசித்து வருகிறார். தனது சொந்த வீட்டில் ஒரு போர்ஷனில் இவரும், 10 போர்ஷனை வாடகைக்கும் விட்டுள்ளார். அதில் ஒரு வீட்டிற்கு பாஜக தென் சென்னை மாவட்டச் செயலாளரான ராமலிங்கம் வாடகைக்கு வந்துள்ளார். இவர் வாடகைக்கு வந்த 4 மாதங்களிலேயே மூதாட்டிக்கு பென்ஷன், வாடகை என தாராளமாக பணம் வருவதும், இந்த வீடு மட்டுமின்றி விருகம்பாக்கத்தில் சொத்துக்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளார். மூதாட்டி உறவினர்கள் யாரும் இன்றி தனியாக வசித்து வருவதையும் உறுதி செய்து கொண்ட ராமலிங்கம், வாடகைக்கு இருக்கும் வீட்டை சொந்த வீடாக மாற்ற தீர்மானித்துள்ளார்.
இதையும் படிங்க: "பா.ஜ.க. பதிவை 'எக்ஸ்' வலைத் தளத்தில் ரகசியமாக பகிர்ந்த டெல்லி தேர்தல் அதிகாரி" : ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

யாருமில்லாத மூதாட்டி தேவிகா ராணிக்கு, வாடகை வசூலித்துக் கொடுப்பது, சொத்துக்களை பராமரிப்பது என ஆரம்பத்தில் உதவி செய்து வந்துள்ளார். வெளியே உதவி செய்வதாக காட்டிக்கொண்டாலும், 18 மாதங்களாக தனது போர்ஷனுக்காக வாடகையை தராமல் இழுத்தடித்து வந்த ராமலிங்கம், பிற வீடுகளின் வாடகைப் பணத்தையும் தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டுள்ளார்.
வீட்டை ஆட்டையைப் போட திட்டம்:
விருகம்பாக்கத்தில் உள்ள மூதாட்டியின் மற்றொரு வீட்டிற்கு பாபி என்ற தனது ஆதரவாளரை மூதாட்டியின் ஒப்புதலின்றி ராமலிங்கமே வாடகைக்கு வைத்துள்ளார். அதுமட்டுமின்றி பாபிக்கு மூதாட்டி வீட்டை வாடகைக்கு விட் ஏற்றுக்கொள்வது போன்ற போலியான வாடகை ஒப்பந்தத்தை தயார் செய்து, அதில் மூதாட்டி 50 ஆயிரம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டதாக போலி கையெழுத்தும் போட்டுள்ளார்.

இதற்கு எல்லாம் உச்சமாக மூதாட்டி இறந்துவிட்டதாக கூறி அவரது சொத்துக்களுக்கான ஆவண நகல்களையும் பத்திரப்பதிவுத் துறையில் இருந்து வாங்கியுள்ளார். அதனை வைத்து மூதாட்டியின் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றுவதற்கான ஆவணங்களையும் தயார் செய்து வந்துள்ளார்.
கண்டுகொள்ளாத காவல்துறை:
இதுகுறித்து கடந்த செப்டம்பர் மாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மூதாட்டி தேவிகா ராணி புகார் அளித்துள்ளார். ஆனால் பாஜகவில் அவருக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் விசாரணையில் இருந்து தப்பியுள்ளார். இதனையடுத்து மூதாட்டி நீதிமன்றத்தை நாட, உடனடி நடவடிக்கை எடுக்க நீதிமன்றமும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் போலீசாரோ ராமலிங்கம் மீது வழக்குப்பதியாமல் அவரது ஆதரவாளர்கள் சிலர் மீது மட்டும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது. மேலும் தன்னை மீறி நீதிமன்றம் வரை சென்ற மூதாட்டியை ராமலிங்கமும் சில ஆட்களும் சேர்ந்து மிரட்டுவதாக மீண்டும் புகார் தெரிவித்துள்ளார் மூதாட்டி தேவிகா ராணி. வாடகைக்கு விட்ட வீட்டை ஆட்டையைப் போட திட்டமிட்ட பாஜக நிர்வாகியின் செயல், சொந்த வீடு வைத்திருப்போருக்கு பேரதிர்ச்சியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: மன்மோகன் சிங் மீது திடீரென பாஜகவுக்கு அக்கறை: காங்கிரஸிடம் புதிய கோரிக்கை..