மதுவிலக்கிற்கு எதிராக பாமக பற்றவைத்த நெருப்பை தற்போது தமிழகம் முழுவதும் பாஜகவினர் கொளுந்துவிட்டு எரிய வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என இன்று வரை தீவிரமாக போராடி வரும் கட்சியாக பாமக உள்ளது. திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடிக்கக்கூடாது, சரக்கடிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்ட போதெல்லாம், அதனை வேடிக்கையாக பார்த்தது திமுக அரசு. ஆனால் சினிமா நடிகர்களை ரோல் மாடலாக கொண்டு எந்த இளைஞனும் போதையின் பாதையில் சென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ராமதாஸ். சோசியல் மீடியாக்களில் ரசிகர்கள் ட்ரோல் செய்த போதும், பல கண்டன குரல்கள் எழுந்த போதும் ரஜினி, விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களைக் கூட அவர் எதிர்க்கத் தவறியதில்லை.

குறிப்பாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும் என தீவிர போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதற்கு பெண்களின் பேராதரவு கிடைத்தது. டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு திரண்டு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெண்களே தன்னெழுச்சியாக எழுந்து டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். இதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சி மதுவிற்கு எதிராக முன்னெடுத்த போராட்டங்களே ஆகும்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா மேல்சபைத் தேர்தல்: பாஜக, சிவசேனா, என்சிபி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு.. காங்கிரஸ் ஜீரோ..!

தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என திமுக அரசு காரணம் கூறி வருகிறது. ஆனால் உண்மையில் தமிழக அரசின் கஜானாவை நிரப்ப மட்டுமல்ல, மெகா ஊழலுக்கு திட்டமிட்ட டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவது தற்போது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு மூலமாக தெரியவந்துள்ளது. டாஸ்மாக் கடைகள் மூலமாக 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது.

இதனைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அங்காங்கே டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடவும் பாஜகவினர் தயாராகினர். ஆனால் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி காவல்துறையினர் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினரை கைது செய்தனர், சில முக்கிய தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்தனர். சென்னையில் போராட்டத்திற்காக புறப்பட்ட முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் பாதி வழியிலேயே வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டத்தை எக்காரணம் கொண்டு தமிழக அரசால் முடக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்திருந்த நிலையில், தற்போது பாஜகவைச் சேர்ந்த பெண் தொண்டர்கள் நூதன முறையில் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். 5000 டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ மாட்டப்படும் போராட்டம் தேதி சொல்லாமல் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அடுத்த ஒரு வாரத்துக்குள்ள தேதி குறிப்பிடாமல் அனைத்து டாஸ்மாக் கடைகளில் மகளிரணியினர் முன்னிருந்து நான் உள்பட முதல்வரின் ப்ரேம் போட்ட போட்டோவை சுத்தியல் வைத்து, ஆணியடித்து ஒட்ட போகிறோம் என அறிவித்தார்.

அதன்படி, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு பாஜக மகளிர் அணியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டி வருகின்றனர்.“போதையின் பாதையில் செல்லாதீர்கள்” “அப்பா இது நியாயமா” என்ற வாசகங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை டாஸ்மாக் கடை வாசல்களில் ஒட்டி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அவுரங்கசீப் சமாதியை அகற்றுவதுதான் இப்போ முக்கியமா..? பாஜக, இந்துத்துவ அமைப்புகளை விளாசிய வேல்முருகன்.!!