'மகா கும்பமேளா' நெரிசலில் 30 பக்தர்கள் பலி: நடவடிக்கை, வழிகாட்டுதல்கள் கோரி, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு
உத்தரபிரதேச மாநிலம், திருவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா வில், அமாவாசை தினமான நேற்று ஒரு நாள் மட்டும் ஏறத்தாழ 6 கோடி பேர் புனித நீராடினார்கள்.
சில இடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த துயர நிகழ்வு குறித்து மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது.
இந்த நிலையில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட விபத்து குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கும்பமேளாவின் கூட்டநெரிசல்களும், உயிரிழப்புகளும்: 1954 முதல் 2025 வரை ஒரு பார்வை
விஷால் திவாரி என்ற வழக்குரைஞர் தாக்கல் செய்த இந்த மனுவில், "பக்தர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பான அடிப்படை தகவல்களை வழங்குவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும், பிரயாக்ராஜில் உள்ள அவர்களுடைய வசதி மையங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கும்படி" கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
"வெளி மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள், எந்தவித பிரச்சனைகளையும் சந்திக்காதவாறு எளிதில் உதவி பெறுவதற்கும், சாலைகளில் அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டும் பெயர் பலகைகளை பிற மொழிகளில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றும், அந்த மனுயில் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
"உத்தரப்பிரதேச அரசின் ஒருங்கிணைப்புடன் அனைத்து மாநில அரசுகளும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்ட மகா கும்பமேளா மருத்துவ குழுக்களை நிலைநிறுத்த வேண்டும். இதன் மூலம் அவசர காலங்களில் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படக் கூடாது" என்றும் அந்த மனுவில் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அத்துடன், "முக்கிய பிரமுகர்களின் வருகை பக்தர்களின் பாதுகாப்பை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றும், தங்களுடைய அலட்சியத்தால் கூட்ட நெரிசலுக்கு வழி வகுத்த அதிகாரிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் படியும் உத்தரபிரதேச மாநில அரசுக்கு உத்திரவிட வேண்டும் என்றும், அந்த பொதுநல மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் கடும் கூட்டநெரிசல், தள்ளுமுள்ளு: உயிரிழப்புக்கு வாய்ப்பு, ஏராளமானோர் காயம்