செங்கோட்டையன் உடன் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை.. இபிஎஸ் மீதான அதிருப்தியை சரிக்கட்ட முயற்சி..!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டி உள்ளது. ஒருபக்கம் ஆளுங்கட்சி மீது எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள், போராட்டங்கள்.. மறுபக்கம் அந்தந்த கட்சிக்குள்ளேயே நடக்கும் உட்கட்சி மோதல்கள், அணி மாறல்கள் என நாளுக்கு நாள் அரசியல் அரங்கில் காட்சிகள் மாறி வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்குள் நடக்கும் சலசலப்புகள் ஒன்றல்ல, இரண்டல்ல.. எக்கச்சக்கம்.. அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதே சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆதரவாளர்களையும் விலக்கி வைத்தது. ஒருவழியாக எல்லா பிரச்னைகளும் முடிவுக்கு வந்தன என்று நினைக்கும்போது எம்ஜிஆர் காலத்து விசுவாசியான செங்கோட்டையன் இப்போது போர்க்கொடி தூக்கி உள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவின் புதிய யுக்தி… செங்கோட்டையன் வழியிலேயே திருப்பியடித்த எடப்பாடி பழனிசாமி..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமான நெருக்கடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அவர் பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது முதலாவது அஜெண்டா. அதுவும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட ஒன்றுபட்ட அதிமுகவாக மாற வேண்டும் என்பது இரண்டாவது அஜெண்டா.
இதற்கு மறுப்பு தெரிவித்தால் தேர்தல் ஆணையம் முன்பாக உள்ள அதிமுக கட்சி, சின்னம் தொடர்பான வழக்கில் இபிஎஸ்-க்கு எதிரான முடிவுகள் வரலாம். இல்லையெனில் எடப்பாடி பழனிசாமியின் கொங்கு இனத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் மூலம் அதிகார மாற்றம் செய்யப்படவும் கூடும் என அவர் மிரட்டப்படுகிறாரோ என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதற்காகத் தான் கடந்த ஒரு மாதகாலமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனின் செயல்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இபிஎஸ் பெயரைக் கூட குறிப்பிட மறுக்கும் செங்கோட்டையன், தனது பாதை தெளிவாக இருப்பதாக கடந்த சனிக்கிழமை பேட்டி அளித்திருந்தார்.
இதனிடையே செங்கோட்டையனை சமாதானப்படுத்த அதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். திமுகவை எதிர்க்க வேண்டிய நேரத்தில் நமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காது என்று அவர்கள் எடுத்துரைத்து உள்ளனர். மேலும் ஆளுங்கட்சிக்கு எதிராக டாஸ்மாக் ஊழல் வெளிப்பட்டுள்ள சூழலில் அதனை வைத்து பாஜக தடாலடி அரசியல் செய்து வருவதையும், இதனை அதிமுக செய்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் செங்கோட்டையனிடம் கூறி உள்ளனர்.
நமக்குள் நாம் ஒற்றுமையுடன் இல்லாத காரணத்தால் தான் பாஜக தீவிரமாக செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையனிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு செங்கோட்டையன் அதிமுக வெல்ல வேண்டும், இரட்டை இலைச் சின்னம் நமக்கு வேண்டும் அதற்கு நான் எந்த குந்தகமும் செய்யவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் எடுத்துள்ள இந்த சமாதான முயற்சி கை கொடுக்குமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விடும்.
இதையும் படிங்க: திமுக அரசின் பட்ஜெட் ஹிட்டா.? அட்டர் ஃபிளாப், சிம்ப்ளி வேஸ்ட்.. திமுக அரசை பஞ்சராக்கிய இபிஎஸ்.!