உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார்.. ஹெச். ராஜா அதிரடி கணிப்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் தேர்வுக்கான கருத்து கேட்புக் கூட்டம் பழநியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
திருப்பரங்குன்றம் மலையின் படிகளில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டவர்களை அரசு எப்படி அனுமதித்தது? இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: ராமநாதபுரம் எம்.பி. பதவியை ராஜினாமா பண்ணுங்க.. நவாஸ் கனியை நெருக்கும் அண்ணாமலை!
முருகனுக்கு வந்த சோதனையாக, பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி மறுப்பு என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது கண்டனத்துக்கு உரியது. கட்சி மாநாட்டின்போது உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெறப்படுகிறதா? கோயில் சொத்தையே காப்பாற்ற முடியாதவர்கள், அன்னதானம் வழங்க அனுமதி வாங்க வேண்டும் என்று கூறுவதா? நானே அங்கு சென்று அன்னதானம் வழங்குவேன்.
தமிழகத்தில் திமுக வளர்கிறதா, இல்லையா என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரிந்துவிடும். சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. எனவே, அவர் விரைவில் சிறைக்கு செல்வார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 6 போலீஸ்காரர்கள் உதவியாக இருந்திருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி காவல் துறையின் 50% ஈரல் அழுகி விட்டதாக கூறினார். தற்போதைய மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவல் துறையின் ஈரல் 100% அழுகிவிட்டது. எனவே, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியில் இருப்பதற்கே அருகதையற்றது” என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவில் சேர்ந்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு புதிய பதவி