இந்தியா கூட்டணிக்கு "அடிமேல் அடி": டெல்லி தேர்தலில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்; அகிலேஷ் யாதவுடன் மம்தாவும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சிதறி வருகிறது. அகிலேஷ் யாதவை தொடர்ந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளித்ததை தொடர்ந்து, டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. ஏற்கனவே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கெஜ்ரிவாலுக்கு தனது ஆதரவை அறிவித்தது. அவரைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் கெஜ்ரிவாலுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். தனக்கு ஆதரவளித்த அகிலேஷ் யாதவ் மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் "தனிப்பட்ட முறையில் பெரிதும் கடமைப்பட்டு இருப்பதாக" ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்திருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி தேர்தலிலும் இந்த இரு கட்சிகளும் கெஜ்ரிவாலை ஆதரித்து இருந்தது நினைவு கூரத்தக்கது.
முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ் கூறும்போது, டெல்லி மக்கள் பாஜகவை நிச்சயம் தோற்கடிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார். ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளுமே இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து இருந்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் ஒன்றுபட்டு பாஜக கூட்டணியை எதிர்த்தனர். தற்போது இந்தியா கூட்டணியின் பெரும்பான்மை கட்சிகள் கெஜ்ரிவாலை ஆதரித்து இருப்பதால் டெல்லி தேர்தலில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார் என்பதில் தொடக்கத்தில் இருந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. டெல்லி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த விரிசல் மேலும் பெரிதாகி இருக்கிறது. ஏற்கனவே சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் சேர முடிவை எடுத்திருப்பதால் "இந்தியா கூட்டணி" முழுமையாக சிதறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
உத்தவ் தாக்கரேவும் ஆதரவு
சிவசேனா( யு பி டி )கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவும் டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது என்று முடிவு எடுத்திருக்கிறார். இது குறித்து அவருடன் கெஜ்ரிவால் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: விடை பெறும் காங்கிரஸ்! 50 ஆண்டுகளுக்குப்பின் அக்பர் சாலையிலிருந்து கோட்லா சாலைக்கு மாற்றம்..
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை எட்டாம் தேதி நடக்கிறது. தொடர்ச்சியாக இரண்டு தேர்தலில் வெற்றி பெற்ற கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது வெற்றியை (ஹாட்ரிக்) ருசிக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த தேர்தலில் 62 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி. பாரதிய ஜனதா 8 இடங்களை மட்டுமே கைப்பற்றி மோசமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் பல்வேறு பிரச்சனைகளில் வேறுபட்டு நிற்கின்றன. காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி யுடன் கூட்டணி வைத்தது தவறு என்று கூறியது இரு கட்சிகள் இடையே இருந்த உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.
மக்கான் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கெஜ்ரிவால் அது குறித்து காங்கிரஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற கட்சிகளையும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகும்படி வலியுறுத்துவேன் என்று எச்சரித்து இருந்தார்.
இதன் தொடர் நடவடிக்கையாகவே தற்போது டெல்லி தேர்தலில் காங்கிரஸ் தனித்தே சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: காத்திருக்க முடியாதா? ராகுல் காந்திக்கு பிரணாப் முகர்ஜி மகள் கேள்வி