சாட்சி விசாரணையை தடையின்றி நடத்துங்கள்.. என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு..!
சாட்சி விசாரணையை தடையின்றி நடத்த வேண்டும் என்று என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டாலும், சாட்சி விசாரணையை நடத்த வேண்டும் என, குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருபுவனத்தைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு சென்னை, பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது பரூக், விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆஜராக விலக்கு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதையும் படிங்க: பணத்தைக் கட்டினால் தான் வங்கிக் கணக்கை கையாள முடியும்.. திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு நீதிமன்றம் செக்..!
அன்றைய தினம் ஆஜராக முகமது பரூக், பிடி வாரண்டை திரும்பப் பெறக் கோரிய மனுவை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு, விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் மனுக்களை தள்ளுபடி செய்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதைச் சுட்டிக்காட்டியது.
ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை சிறப்பு நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் எனவும், இந்த மனுக்களை பெருந்தன்மையுடன் பரிசீலிக்கவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமல் இருப்பதால் விலக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக, என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ள காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனக் கூறி, முகமது பரூக்கை சிறையிலடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
என்.ஐ.ஏ. சட்டத்திலும், பொடா சட்டத்திலும், குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாமல் வழக்கு விசாரணையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டாலும் விசாரணையை நடத்த வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஈஷா அறக்கட்டளைக் கட்டிய தகனமேடை.. அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!