×
 

இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி கணிப்பு!

தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் அதற்கான சூழல் உருவாகிவிட்டது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக சொந்தங்களுடன் சந்திப்புக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசுகையில், "வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க எம்ஜிஆர் சட்டம் கொண்டு வர இருந்தார். ஆனால், உடல் நலக்குறைவால் அவர் மறைந்தார். ஜெயலலிதா ஆட்சியில் நன்மையும் செய்யவில்லை. தீமையும் செய்யவில்லை. கருணாநிதி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.


ஆனால், அந்தச் சட்டம் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்பதால், நீதிமன்றத்தில் அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட தமிழக முதல்வர் ஸ்டாலின் காரணமாக இருந்தார். வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அப்படி நீதிமன்றம் சொல்லி மூன்று ஆண்டுகளாகிவிட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதனை செய்யவில்லை. வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்தான்.

மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று பாமகதான் முதன் முதலில் வலியுறுத்தி, போராட்டங்களை நடத்தியது. மேட்டூர் உபரி நீரை திருமணிமுத்தாறு, சரபங்கா நதி, வசிஷ்ட நதி ஆகியவற்றுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் பாமகவின் திட்டம். சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை காமராஜர் காலத்தில் இருந்தே இருந்தது. அதனை பாமகதான் கொண்டு வந்தது.

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளின் மணிமண்டபத்தை விழுப்புரத்தில் முதல்வர் திறந்து வைத்துள்ளார். அந்தத் தியாகிகளின் குடும்பத்தை, வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து சந்தித்துப் பேசி, கருணாநிதி, திமுகவைப் புகழ்ந்து பேச வைத்து வீடியோ எடுத்துள்ளனர். நாங்கள் மணிமண்டபம் கேட்கவில்லை, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடுதான் கேட்கிறோம். தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி மட்டுமே அமையும். அதற்கான சூழல் தற்போது வந்துவிட்டது" என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், "3 மாதங்களுக்கு நாங்கள் சொல்வதை தமிழக அரசு கேட்டால், தமிழகத்தில் எந்தப் போதைப்பொருளும் இருக்காது. டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டால், அரசுக்கு வருமானம் இருக்காது என்று சொல்கிறார்கள். ஆனால், மது விற்பனை இல்லாமல் எப்படி வருவாயை ஈட்ட முடியும் என்பது குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பே புத்தகம் வெளியிட்டது பாமக.

இதையும் படிங்க: 'விஜய்க்கு இருக்கிற அறிவுகூட இல்லை..? பெரியார் பெயரைச் சொல்லி வீரமணி ஏமாற்றுகிறார்...' தவெக-வுக்கு மாறும் விசிக ஆதரவாளர்கள்..!



பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் என்ன வரம் வேண்டும் என்று என்னிடம் கேட்டால், தமிழகத்தில் ஒரு சொட்டு மழைநீர் கூட கடலில் வீணாகச் சென்று கலக்கக் கூடாது என்று ஒரு வரம் கேட்பேன். இன்னொரு வரமாக தமிழகத்தில் ஒரு சொட்டு மதுவும் இருக்கக் கூடாது என கேட்பேன்.  கொசுறு வரமாக தமிழகத்தில் கஞ்சா இருக்கக் கூடாது என்றும் கேட்பேன். அனைத்து சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீடு நாங்கள் வாங்கிக் கொடுத்தோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களையும் ஒரு தாய் மக்களாக, நினைத்து, அவர்களுக்காக நாங்கள் பாடுபடுவோம்" என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.

இதையும் படிங்க: திமுகவில் இணைய எம்ஜிஆர் விரும்பினாரா? துரைமுருகனின் தவறான பேட்டி: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share