×
 

யார் அந்த சார்? அரசு பள்ளி தத்தெடுப்பு, பொங்கல் பரிசு 1000 ரூபாய்… அரசுக்கு எதிராக கிளம்பும் காங்கிரஸ்…சூடுபிடிக்கும் களம்..

அரசுக்கு எதிராக கிளம்பும் காங்கிரஸ்

தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கும் பொழுதெல்லாம் தோழமை கட்சிகள் வாய்மூடி மவுனமாக இருக்கும், இல்லாவிட்டால் முட்டு கொடுக்கும். முட்டுக்கொடுப்பதில் முன்னணியில் இருக்கும் காங்கிரஸ் தற்போது அடித்து தூள் கிளப்ப தொடங்கியுள்ளது. ஒரே நாளில் மூன்று விவகாரங்களில் அரசுக்கு எதிராக செல்வப்பெருந்தகை விமர்சனம் தெரிவித்துள்ளார். 

 

திமுகவுக்கு 2025 பிறந்தது போதாத காலமோ அல்லது தேர்தல் காலம் என்பதால் அனைவரும் மாற்றத்தை நோக்கி செல்கிறார்களோ தெரியவில்லை, தான் இதுநாள் வரை முட்டுக்கொடுத்து வந்த திமுகவுக்கு முதல் அடியாக தங்கள் அடி இருக்கவேண்டும் என்று சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக இறங்கிவிட்டது. ஆளாளுக்கு சப்ஜக்ட் பிரித்து அடிக்க ஆரம்பித்துள்ளது திமுகவிற்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: விழுப்புரத்தை திணறவைத்த செம்படை பேரணி- பேரிடராக பாஜக, ஆர்.எஸ்.எஸ். பாசிச அரசியல்- சிபிஎம் மாநாடு!

 

மழை வெள்ளம் கடுமையாக பாதித்த காலத்தில் திமுக அரசின் மீது கடும் விமர்சனம் வந்த நேரத்தில் இதைவிட சிறப்பாக யாரும் செய்திட முடியாது என ஆண்டு முழுவதும் முட்டுக்கொடுத்த தோழர்கள் சாம்சங் போராட்டத்தில் தங்கள் இருப்புக்கு பிரச்சனை வந்தவுடன் முதல் குரலை எழுப்பினார்கள். ஆனால் அதையும் திறமையாக முறியடித்தது அரசு. அதன் பின்னர் சற்று ஒதுங்கியே இருந்தவர்கள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் முதல் குரலாய் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். மாணவர் அமைப்பு முதல் ஆளாக குதித்து போராடியது. 

 

போலீஸ் அடக்குமுறை, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சிபிஎம் கோபத்தை வெளிப்படுத்த, தொடர்ந்து அரசு பள்ளிகள் தத்தெடுப்பு குறித்து சிபிஎம், சிபிஐ கொடுத்த அறிக்கைகள் திமுகவை நேரடியாக தாக்கியது. யார் அந்த சார் விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் முறையாக விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை வெளிக்கொணர வேண்டும் என்று வெளிப்படையாக சொல்லி போலீஸ் எதிர்க்கட்சிகள் போராடுவதை தடுக்கும் விதத்தில் அனுமதி மறுப்பதை விமர்சித்தார். இதில் ஒருபடி மேலேபோய் பண்ருட்டி வேல்முருகன் கடுமையாக அரசை விமர்சித்தார், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். 

இந்த விவகாரங்களில் பட்டும் படாமல் இருந்தது காங்கிரஸ், படுத்தே கிடப்பது மதிமுக. இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் தனது எதிர்ப்பை பதிவு செய்துவிட்டார். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று விவகாரங்களில் தனது கருத்தை பகீரங்கமாக வைத்துள்ளார். முதலில் யார் அந்த சார் விவகாரத்தில் அரசு முறையாக விசாரணை நடத்தி வருகிறது. செல்போனை ஆய்வு செய்தாலே யார் அந்த சார் சிக்கிக்கொள்வார் என்று சொல்லியுள்ளார். அதே நேரம் எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து பேசினார். 

 

போராட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு, அதானி விவகாரத்தில் நாங்கள் போரட்டம் நடத்திய போது எங்களையும் காவல்துறையினர் கைது செய்தனர், அடிப்படை வசதிகள் குறைவான இடத்தில் எங்களை தங்க வைத்தனர் போராட்டமே நடத்தக்கூடாது எனக்கூறுவது தவறு என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

 

அதேபோல் அரசுப்பள்ளிகள் தாரை வார்ப்பு விவகாரத்தில் நேற்று அமைச்சர் மகேஷ் மிகவும் உருக்கமாக கே.பாலகிருஷ்னனையும் முத்தரசனையும் வருத்ததோடு கண்டித்து விளக்கமளித்த பின்னரும் செல்லாது செல்லாது என்று செல்வப்பெருந்தகை உண்மையை போட்டு உடைத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். 

 

கல்வியாளர்கள் என்கிற போர்வையில் அரசு பள்ளிகள் நிகழ்வுக்குள் தனியார்களை அனுமதிக்க கூடாது. சிஎஸ்ஆர் ஃபண்ட் மூலம் கல்வியில் பெரும் வசூல் செய்து அதில் லாபத்தை ஈட்டி செலவழிக்க முன் வந்தால் அரசு அதை அனுமதிக்க கூடாது. ஒருவேளை நிவாரணம் தர முன் வந்தால் அரசுக்கு கொடுக்கலாம், காமராஜர்கூட பல ஆயிரம் பள்ளிகளை உருவாக்கும்போது தனியார்கள் பணம், நிலத்தை கொடுத்தார்கள். 

 

ஆனால் ஆசிரியர் நியமனத்தை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தனியார் பள்ளிகளுக்கு மைதானம் கிடையாது, அரசுப்பள்ளிகளில் மைதானம் உண்டு இதை பயன்படுத்த தனியார் பள்ளிகள் முயற்சிப்பார்கள் அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிரான கருத்தை பதிவு செய்தார்.

 

அடுத்து பொங்கல் பரிசுத்தொகை 1000 ரூபாய் இந்த ஆண்டு கொடுக்காததை விமர்சித்து 1000 ரூபாயை கொடுக்க வேண்டும் 1000 ரூபாய் அளிக்கமாட்டோம் என்கிற முடிவை மாற்றி பொங்கல் திருநாளில் அரசு இந்த ஆண்டும் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசியதும் பெரிதாக பார்க்கப்படுகிறது. ஆகா காங்கிரஸ் ஃபார்முக்கு வந்துவிட்டதா? என தொண்டர்கள் கையை கிள்ளிப்பார்த்துக் கொண்டதையும் காண முடிந்தது. இது ஒரு தேர்தல் காலம் இப்ப அசையலன்னா எப்ப அசையறது போங்கப்பு என்று ஒரு தொண்டர் சொல்லியபடி நகர்ந்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு.. அமலாக்கத்துறைக்கு போட்டு கொடுத்தது 'சக' விஐபிகள்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share