டெல்லி சட்டப்பேரவை தேர்தல் களம்... ஆம் ஆத்மி-யின் அதிஷி வேட்புமனு தாக்கல்...
டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி மாதம் 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
பிப்ரவரி 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. கடந்த 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இன்றைய தினம் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான அதிஷி தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். கல்காஜி தொகுதியில் போட்டியிடும் அவர், மாவட்ட தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு படிவத்தை வழங்கினார்.
70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட டெல்லி தேர்தல் களம் மும்முனை போட்டியை எதிர்கொண்டுள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகியவை பிரதானமாக மோதுகின்றன. இதில் 3 முறை வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி 4-வது முறையாக வெற்றி பெற தனது கட்சித் தொண்டர்களை முடுக்கி விட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தங்களது வாக்கு விகிதத்தை அதிகரிக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி தேர்தலில் காங்கிரஸ் - பாஜக ரகசிய கூட்டணி: அம்பலப்படுத்துகிறார், கெஜ்ரிவால்
அதேசமயம் 2015-ல் வெறும் 3 இடங்கள், 2020-ல் 8 இடங்கள் என முன்னேறிய நிலையில் இந்த 2025-ல் ஆட்சியைப் பிடிப்போம் என பாஜக பேசி வருகிறது. காங்கிரசைப் பொறுத்தவரை ஒற்றை இலக்கத்திலாவது எண்ணிக்கையை பதிவு செய்தாலே அது குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிதான்.
வரும் 17-ந் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும். 18-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், 20-ந் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளும் ஆகும். குளிர் மிரட்டும் தலைநகரில் தேர்தல் நெருப்பு பற்றி எரிந்து வருகிறது. குளிர்காயப் போவது யார்? பொசுங்கப் போவது யார்? என்பது பிப்ரவரி 8-ல் தெரிந்து விடும்.
இதையும் படிங்க: ரூ. 2 ஆயிரம் கோடி இழப்பு: சிஏஜி அறிக்கை விவகாரத்தில் 'ஆம் ஆத்மி அரசு'க்கு டெல்லி உயர் நீதிமன்றம் 'குட்டு'