பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து.. தரைமட்டமான பட்டாசு ஆலை.. 3 பெண்கள் பலி.. நிவாரணம் அறிவித்த முதல்வர்..!
தருமபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு கிடங்கில் பணிபுரிந்த 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாவது தொடர்கதையாக உள்ளது. பாதுகாப்பான பணிச்சூழல் இல்லாததால் அப்பாவி தொழிலாளர்கள் பலர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகின்றது. பல நேரங்களில் தொழிலாளர்கள் உடல் சிறதி இறக்கும் சம்பவமும் நடக்கிறது. இதன் ஒருபகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் இன்று நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே சின்னமுறுக்கம்பட்டி என்ற இடத்தில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல இன்று 4 பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடிபொருட்கள் உரசியதில் பிற்பகல் 3 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் பட்டாசு ஆலை முழுவதுமாக தரைமட்டமானது. அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வெடித்து விபத்தில் 3 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: தர்மபுரி மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்..! கலக்கத்தில் திமுக மா.செக்கள்..!
இந்நிலையில் தி விபத்தில் இறந்த மூவரும் தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர்கள் முறையே செண்பகம், திருமலர், மஞ்சு என்பதும் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. திருமலரும் மஞ்சுவும் உடன்பிறந்த சகோதரிகள் என்பதும் தெரியவந்துள்ளது. பட்டாசுகள் வெடிப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்தான் ஒரு பெண், சாப்பிட்டுவருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். அவர் மட்டுமே அதிர்ஷ்டவ்சமாக உயிர் தப்பி உள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி தனியார் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (24.02.2025) பிற்பகல் சுமார் 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமம், பூமிசமுத்திரத்தைச் சேர்ந்த திருமலர் (வயது 38) க/பெ. விஜயகுமார், செண்பகம் (வயது 35) க/பெ.மேகநாதன் மற்றும் திருமஞ்சு (வயது 33) க/பெ. தியாகு ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குடித்துவிட்டு தகராறு செய்த மருமகன்.. உருட்டு கட்டையால் அடித்து கொலை.. தென்னைமரத்தில் தூக்கிலிட்ட மாமனார், மாமியார்..!