×
 

திமுக - காங்கிரஸ் கூட்டணி டமால்..? இரு கட்சித் தலைவர்களிடையே அதிகரிக்கும் புகைச்சல்!

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகள் இடையே கூட்டணி நீடிக்குமா என்கிற அளவுக்கு தலைவர்களிடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திமுக - காங்கிரஸ் இடையே 2004இலிருந்து கூட்டணி தொடர்கிறது. இக்கூட்டணி 2006, 2016 ஆகிய ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. அப்போது காங்கிரஸ் ஆட்சி அமைக்க, திமுக வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. 2011இல் இக்கூட்டணி  தோல்வியடைந்தது. எதிர்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. ஆனால், 2021இல் இது தலைகீழானது. என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. திமுக எதிர்கட்சியாகிவிட்டது.


2021இல் 30 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் - திமுக கூட்டணி 8 இடங்களில் மட்டுமே வென்றது. இதில் திமுக மட்டும் 6 இடங்களில் வென்றது. எனவே, கூட்டணிக்கு எந்தக் கட்சி தலைமை என்பதில் இரு கட்சிகளுக்கும் போட்டி ஏற்பட்டது. மேலும் 2026 தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் திமுகவினர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே உரசலும் அதிகரித்துள்ளது.



இந்நிலையில் பிரதான எதிர்கட்சியான திமுக, புதுச்சேரி அரசை எதிர்ப்பதில் சுணக்கம் காட்டுவதாக காங்கிரஸ் கடுப்பில் உள்ளது. அண்மையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வட மாநில பெண்ணிடம் நடந்த அத்துமீறல் விவகாரம் புதுச்சேரியில் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் தீவிரமாக கையாண்டு வருகிறது. ஆனால், திமுகவோ அடக்கியே வாசிக்கிறது. காங்கிரஸ் போராட்டம் அறிவித்த நிலையில், திமுக அதில் பங்கேற்கவும் இல்லை. தனியாகவும் திமுக போராட்டம் அறிவிக்கவும் இல்லை. இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி - திமுக அமைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான சிவாக்கும் இடையே வாக்கு வாதங்களும் ஏற்பட்டன. எனவே திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே சலசலப்பு அதிகரித்துள்ளது. எனவே கூட்டணி தாமரை இலையும் தண்ணீரும் போல ஒட்டாமலேயே உள்ளது.

இதையும் படிங்க: 'காங்கிரஸ் ஏன் தொடர்ந்து இந்துக்களை மட்டும் வெறுக்கிறது..?' கடுபேற்றிய கார்க்கே… கலங்கடிக்கும் பாஜக..!



இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்திருந்தாலும், கூட்டணி உடையாது என்று இரண்டு கட்சி தொண்டர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினும் நெருக்கமாக இருக்கிறார்கள். தமிழகத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பலமாக உள்ளது. எனவே கூட்டணியில் பிளவு ஏற்படாது என்று அரசியல் நோக்கர்களும் தெரிவிக்கின்றனர்.



இதையும் படிங்க: டெல்லி தேர்தல்: காங்கிரஸ் - ஆம் ஆத்மி "குடுமி பிடி" சண்டை; கெஜ்ரிவாலுக்கு, பெண் வேட்பாளர் அல்கா லம்பா சவால்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share