இந்தியாவில் வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?.. அடேயப்பா, கேட்டா அசந்து போய்டுவீங்க
இந்தியாவின் மக்கள்தொகை 143 கோடி(2023 கணக்குப்படி).. இவ்வளவு பெரிய மனிதவளம் உள்ள நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவது என்பது ஒரு அசுர சாதனை..
பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமில்லாமல், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் இல்லாமல் பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் நடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளே இன்னும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்தும்போது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் தேர்தலை நடத்தி அதில் குளறுபடிகள் இல்லாமல் சொன்ன தேதியில் முடிவுகளை அறிவிப்பது தேர்தல் ஆணையத்தின அரும்பணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்தாலும் அவற்றை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆகும். சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ அதன் பதவிக்காலம் முடிவடைதற்குள்ளாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விதி. ஆனால், தேர்தல் நடத்தும்போது எவற்றையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொண்டால் வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவீர்கள். ஏறத்தாழ 90 அம்சங்களை கணக்கில் கொண்டு தேர்தல் ஆணையம் ஒரு தேதியை அறிவிக்க வேண்டும்.
இதையும் படிங்க: ‘இன்டர்போலு’க்கே இனி ‘டஃப்’ கொடுப்போம்: அமித் ஷா அறிமுகம் செய்த ‘பாரத்போல்’ தளம் பற்றி தெரியுமா..
எத்தகைய பருவம் (மழை, வெய்யில், குளிர்), பள்ளி - கல்லூரி தேர்வுகள், மத விழாக்கள், கட்சித் தலைவர்களின் பிறப்பு - இறப்பு நாட்கள், பெரும் கட்டுமானங்கள் நடைபெறும் இடங்கள், சாலை - ரயில் போக்குவரத்து திட்டங்கள் என சிறிதும் பெரிதுமாக எல்லா அம்சங்களையும் கணக்கிட்ட பிறகே ஒரு தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியும். எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போல் எப்போதும் ஆளுங்கட்சிக்கு இசைவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு விட முடியாது. ஏனெனில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பும் போது இதற்கான பதிலை தேர்தல் ஆணையம் சொல்லியாக வேண்டும்..
அப்படிப்பட்ட அதிகாரமிக்க தேர்தல் ஆணையத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் ராஜீவ் குமார். அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது பகிர்ந்து கொண்ட ஒரு தகவல், பெரும் ஆச்சர்யத்தை தந்துள்ளது. அதாவது இந்தியாவின் மக்கள் தொகை 143 கோடியாக உள்ள நிலையில் இவற்றில் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என 98 கோடி பேர் உள்ளனராம். வெகுவிரைவில் இந்த எண்ணிக்கை 100 கோடியாக உயரும் என அவர் தெரிவித்துள்ளார்.
யோசித்துப் பாருங்கள், 100 கோடி பேர் வாக்களிக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக திருவிழா என்பது தான் தேர்தல். ஆனால் இதில் தேர்தல் ஆணையத்தின் பங்களிப்பு எந்த அளவு முக்கியமோ, அதே அளவு பொதுமக்களின் பங்களிப்பும் இருந்தாக வேண்டும். ஏனெனில் நூறு சதவித வாக்குப்பதிவு இருக்கும்பட்சத்தில் தான் எந்த அரசியல் கட்சி மக்களிடையே உண்மையிலேயே செல்வாக்கு பெற்றுள்ளது என்பது தெரியவரும்.
பொதுவாக சட்டமன்ற - நாடாளுமன்ற தேர்தல்களில் 50 முதல் 70 சதவிதம் வரையே வாக்குகள் பதிவாகின்றன. இந்த எண்ணிக்கையை நூறு சதவிதமாக உயர்த்த ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நடிகர் - நடிகைகள் கூட திரையில் தோன்றி வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம். அப்போதுதான், ஜனநாயகம் என்ன நினைக்கிறது என்பதை இந்த நாடும் உணர்ந்து கொள்ளும், அரசியல்வாதிகளும் உணர்ந்து கொள்வார்கள். ஊழல் குறைவதற்கும், தகுதியானவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்தவற்கும் நூறு சதவித வாக்குப்பதிவு என்பது மிகவும் அவசியம். நூறு கோடி வாக்காளர்கள் என்ற எண்ணிக்கையை தொடும் நாமும், நூறு சதவித வாக்குப்பதிவு என்ற நிலையையும் அடைய வேண்டும் என்பதே ஜனநாயகத்தை நம்பும் அனைவரின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: வெள்ளம் சூழ்ந்த நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள்: 3 பேர் பலி; மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்..