Erode East By-Election: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் எப்போது? - தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!
பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணத்தை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. இந்த நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மறுதேர்தல்:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்ன்றும், பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனுக்கள் மீது ஜனவரி 17ம் தேதி முடிவெடுக்கப்படும் என்றும், வேட்புமனு பரிசீலினை ஜனவரி 18ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசிய நாளாக ஜனவரி 20ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஈரோடு கிழக்கிற்கு இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலும், மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, நாம் தமிழர் வேட்பாளர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம்:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனிடையே கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி உயிரிழந்தார். நோயின் தீவிரம் மற்றும் வயது முதிர்வு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.