ஈரோடு கிழக்கில் தொடங்கியது இடைத்தேர்தல்.... அதிகாலை பனியால் மந்தமான வாக்குப்பதிவு...
ஈரோடு இடைத்தேர்தல் தொடங்கியது
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14-ந் தேதி இயற்கை எய்தினார். அங்கு பிப்ரவரி 5-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 37 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் ஈரோடு கிழக்கில் உள்ளனர்.
இவர்கள் வாக்களிக்க ஏதுவாக தொகுதிக்குள் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவிக்கள், வாக்காளர்கள் வரிசையில் நிற்க ஏற்பாடுகள், வெயில் அடித்தால் இளைப்பாற பந்தல் உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 9 இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வெற்றி 2026 தேர்தலின் வெற்றி.. திமுகவினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பூஸ்ட்.!
46 வேட்பாளர்கள் என்பதால் ஒரு வாக்குச்சாவடியில் மொத்தம் 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் வேட்பாளர்களின் பெயர்கள், கட்சியின் சின்னம் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. காலை 5.30 மணியளவில் மாதிரி வாக்குப்பதிவும் நடைபெற்றது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு எந்திரத்திலும் சுமார் 50 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு முறையாக அது வேலை செய்கிறதா என்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கடந்த 2 நாட்களாக மாநிலம் முழுவதும் அதிகாலை நேரத்தில் அடர்பனி சூழ்ந்து காணப்படுகிறது. இன்றும் அதே நிலையே நீடித்ததால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும் பனிபடர்ந்தே உள்ளது. இதனால் வாக்குச்சாவடி மையங்களில் கூட்டம் குறைவாக உள்ளது. பனி குறைந்தபிறகே பொதுமக்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சித்தோடு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். வருகிற 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க: சீமானை விடாமல் விரட்டும் பெரியார் மண்... சாட்டை துரைமுருகன், சீதாலட்சுமி உட்பட 7 பேருக்கு ஆப்பு!