பாஜகவை ஆட்டிப் படைக்கிறது ஆர்.எஸ்.எஸ்..! பிரதமரை வசைப்பாடிய டி.ராஜா..!
ஆர்.எஸ்.எஸ்-க்கு பிரச்சாரம் செய்பவராகவே பிரதமர் மோடி செயல்படுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் டி ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நமது நாட்டில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி என்று குற்றம் சாட்டினார். ஆர் எஸ் எஸ் கொள்கைகளை பின்பற்றும் கட்சியாக உள்ள பாஜக பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்காக செயல்படும் அரசை நடத்தி வருகிறது என்று சாடினார்.
இந்தப் பின்னணியில் கல்விக் கொள்கையின் பெயரில் இந்தியக் கூட்டாட்சி நெறிமுறைகளைத் தகர்க்கும் வேலைகளை மத்திய அரசு செய்து வருகிறது என்றும் மொழிக் கொள்கை மற்றும் கல்விக் கொள்கை உள்ளிட்டவைகளில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸின் எடுபிடிகள்.. பிரதமர் மோடி மீதும் பாஜக அரசு மீதும் சிபிஐ ஆவேச தாக்கு!!
இந்திய ஒற்றுமை காக்கப்பட வேண்டும், மாநில உரிமைகள், தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று அவர் முனைப்புடன் செயல்பட்டு வருவதால் தான் தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறோம் என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகவே செயல்பட்டு வருவதாகவும், ஆர் எஸ் எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் சென்றது வியப்புக்குரிய விஷயம் அல்ல என்றும் கூறினார்.
பாஜகவை ஆர்எஸ்எஸ் ஆட்டிப்படைத்து வருவதாகவும் அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொள்ளாத இயக்கம் ஆர்எஸ்எஸ் என்றும், அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் நாட்டை மதவாத அடிப்படையில் பிரிக்கும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் ஈடுபடுவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை டி.ராஜா முன் வைத்தார்.
அரசியலமைப்பின்படி உள்துறை அமைச்சர் பதவி ஏற்று இருந்தாலும் அவர் அதுபோல நடந்து கொள்வதில்லை என்றும் சத்தீஸ்கர் மாநில மலைப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகளை துரத்தியடித்து விட்டால் அங்கு இருக்கக்கூடிய கனிம வளங்களை எல்லாம் பெரு நிறுவன முதலாளிகளுக்கு கொடுத்து விடலாம் என்ற நோக்கத்தில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார். நாட்டை காப்பாற்ற மதவாத சக்திகளுக்கு எதிராக போராடுபவர்களுக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் மாமதுரை.. மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு தேதி குறிச்சாச்சு..!