மருதமலையில் மாயமான வெள்ளி வேல்... வசமாக சிக்கிய போலி சாமியார்...!
கோவையில் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
முருகப்பெருமானின் 7வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படும் மருதமலை முருகன் கோயிலில் 12 ஆண்டுகள் கழித்து ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது. அதற்கு முதல் நாள் கோயில் அடிவாரத்தில் உள்ள மடத்தில் இருந்த வெள்ளி வேலை திருடப்பட்டது. இரண்டரை கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் ஒன்றை சாமியார் ஒருவர் திருடியதாக போலீசில் புகார் தரப்பட்டது.
சாமியார் வேடத்தில் வந்த திருடன் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து வெளியான சிசிடிவி காட்சிகளிலும் சாமியார் உடையில் இருக்கும் நபர் வேலை தூக்கிச் செல்வது பதிவாகியிருந்தது. மருதமலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி வேல் கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 14 பேர் சேர்ந்து சிறுமிகளை சீரழித்த கொடூரம்... புதுவையை உலுக்கும் சம்பவம்!
சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றிய வடவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்திய விசாரணையில், பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியது தெரிய வந்தது.
இதனிடையே, மடத்தில் இருந்து வேல் திருடிவிட்டு தலைமறைவாக இருந்த வெங்கடேஷ் சர்மா என்ற 57 வயது சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்... அதிரடியாக அறிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி.!!