திமுகவிற்கு அடுத்த அதிர்ச்சி; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்!
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
தமிழக மீன்வளத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “அமலாக்கத்துறையின் சென்னை மண்டல அலுவலகத்தின் மூலம் தூத்துக்குடி, மதுரை மற்றும் சென்னையில் அமைந்துள்ள ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களைச் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட விதிகளின்படி தமிழக மீன்வளத்துறை, மீனவர் நலன் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவருக்குச் சொந்தமானது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் பணமோசடி தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டார் எனத் தெரியவந்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உங்க அப்பா என்ன பூட்டு வியாபாரியா? - ஸ்டாலினை வம்பிழுக்கும் ஆர்.பி.உதயகுமார்!
2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக வழக்கு தொடரப்பட்டது. 2020ம் ஆண்டு அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி, 2022ம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் பி.எம்.எல்.ஏ சட்டம் ஜூலை 2005-ல் அமலுக்கு வந்ததால், தனக்கு எதிராக சட்ட விரோதப் பணப்பரிமாற்ற சட்டத்தை அமலாக்கத்துறை பயன்படுத்த முடியாது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்தார். ஆனால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் கூறிய காரணங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறையின் பி.எம்.எல்.ஏ வழக்கை ரத்து செய்ய மறுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
தற்போது பி.எம்.எல்.ஏ. எனப்படும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட விதிகளின் படி அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை துருவி, துருவிய விசாரணை நடத்தியதில் இருந்தே திமுக இன்னும் மீளாத நிலையில், அடுத்த அதிர்ச்சியாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் விரைவில் தனியார் பேருந்து சேவை?...