அதிமுகவுடன் கூட்டணி இல்லை- விஜய் திட்டவட்டம்..! திமுக vs தவெக-வாக மாறும் அரசியல் களம்..!
ஆனாலும்,'விஜய் சுற்றுப்பயணம் சென்று வந்த பின்னரே எதையும் உறுதியாக கூற முடியும்' என்கின்றனர் இரு கட்சிகளுக்கும் நெருக்கமாக உள்ள அவர்களது ஆதரவாளர்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பிஎஸ் நீக்கப்பட்ட பின், தென் மாவட்டங்களில் அக்கட்சியின் ஓட்டு வங்கி சரிந்து விட்டது. ஆனால், நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்பதில், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடியார் விடாப்பிடி காட்டி வருகிறார். பாஜக-வுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.
அதேபோல், ஆளும் திமுக, கூட்டணியில் சலசலப்புகள் எழுந்து ஓய்ந்துவிட்டன. எடப்பாடியார் பழனிசாமி கணித்தது போல, அக்கூட்டணியையை உடைக்கமுடியவில்லை.'அடுத்த தேர்தலை இணைந்தே சந்திப்போம்' என திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் அழுத்தம் திருத்தமாக முடிவெடுத்துள்ளன.
அந்த கூட்டணியை பழனிசாமியால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று, அவரது கட்சியினரே திகைத்து நின்ற நேரத்தில், நடிகர் விஜய் களமிறங்கினார். திமுக, எதிர்ப்பை அவர் பிரதானமாக கையில் எடுத்திருப்பது, அதிமுகவுக்கு இணக்கமான அம்சமாக பார்க்கப்பட்டது. அதிமுகவை விஜய் இதுவரை விமர்சிக்கவில்லை என்பது, இன்னொரு காரணமாக சொல்லப்பட்டது.
இதையும் படிங்க: சொந்த கட்சிக்கே கைகொடுக்காத பி.கே.வியூகம்: விஜய்க்கு ஒர்க் அவுட் ஆகுமா..?- தொடரும் சறுக்கல்கள்..!
ஆனால், ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத கட்சியை விமர்சனம் செய்வதில் அர்த்தம் இல்லையே என்று, விஜய் கட்சியினர் விளக்கம் அளித்து வந்தனர். அதில், நியாயம் இருந்தாலும், பாரம்பரியமான திமுக எதிர்ப்பு ஓட்டுகளை வைத்துள்ள அதிமுகவை விமர்சிப்பது, தன் புதிய கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது என்பதை விஜய் உணர்ந்துள்ளதாகவும், இதையே அவரது மவுனம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறப்பட்டது.
இந்தியாவில், 50 சதவீத ஓட்டுகளுக்கு மேல் வாங்கி, உண்மையான பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சிக்கு வருவது இல்லை. 25 முதல், 30 சதவீத ஓட்டுகளை பெற்று, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே வாடிக்கையாக நடக்கிறது.
அதாவது, எதிர்ப்பு ஓட்டுகள் பல கட்சிகளுக்கு பிரிந்து செல்வதால், பிரதான கட்சி ஆட்சியை பிடிக்கவோ, தக்க வைக்கவோ முடிகிறது. இந்த பின்னணியில் தான், பலமான கூட்டணிக்கு அவசியம் ஏற்படுகிறது. எடப்பாடியாரும், விஜயும் அப்படிப்பட்ட ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இளைஞர் பட்டாளத்தை எளிதில் திரட்டும் சக்தி பெற்றவர் என்பதை, முதல் மாநாடு வாயிலாக விஜய் நிரூபித்து உள்ளார்.
ஓட்டு வங்கியில் விரிசல் விழுந்தாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் விசுவாசிகள் வெளியேறவில்லை என்பதை காட்டியுள்ளார் எடப்பாட்யார். இருவரின் பலமும் சேரும் போது, திமுக-வின் வலுவான கட்டமைப்பை சேதப்படுத்த முடியும் என்று அவர்கள் இருவரும் நம்புவதாகவும் கூறப்பட்டது.
அதே சமயம், பத்தோடு பதினொன்றாக எந்தக் கூட்டணியிலும் சேர அவர் தயாராக இல்லை. அதன் விளைவு தான், அதிமுக,வை நோக்கி அவரை நகர வைத்துள்ளது என்று விஜய்க்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வந்தனர். தவெகவுக்கு, 100 சீட்டுக்கும் குறையாமல் கேட்கிறது விஜய் தரப்பு. அப்படி கொடுத்தால் அதிமுகவுக்கு, 134தான் மிஞ்சும்.
எப்படியும் சிறு கட்சிகள் வரத்தான் செய்யும். அவர்களுக்கு ஒன்றிரண்டு கொடுத்தால் இன்னும் குறையும். மெஜாரிட்டிக்கு தேவையான, 118 தொகுதிகளை வெல்ல முடியுமா? என்ற குழப்பம் உருவாகும். எழுந்தால் ஒரே பதில், கூட்டணி ஆட்சி மட்டுமே சாத்தியம். ஆனால் இதனை எடப்பாடியார் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
2011-ல் தேமுதிக -அதிமுக கூட்டணி இணைந்து போது மிகப்பெரும் வெற்றி பெற்றது. அதே போல் 2026-ல் அதிமுக- தவெக இணைந்தால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என பலரும் -எடப்பாடியாரிடமும், விஜயயிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழாவில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அவர் பேசும் போது இரண்டு விஷயங்களை சுட்டிக் காட்டி இருந்தார். ''அடுத்த 62 வாரங்களுக்கு விஜய் தான் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார். 40 சீட்டுகளை வாங்கிக்கொண்டு எம்எல்ஏ ஆவதற்காக நாங்கள் கட்சி ஆரம்பிக்கவில்லை. முதலமைச்சராவதற்காகத் தான் கட்சி ஆரம்பித்திருக்கிறோம்'' என்று பேசினார்.
அவர் கூறிய இந்த இரண்டு விஷயங்களும் அதிமுகவுக்கு கொடுக்கப்பட்ட சமிக்கையாகவே கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் ஈகோவில் டச் பண்ணும் வகையில், விஜய் தான் எதிர்க்கட்சித் தலைவர். 62 வாரங்களுக்கு விஜய்தான் எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவார் என்று தெரிவித்திருந்தார் ஆதவ். விஜயும் எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவராக செயல்படுவார் என்று சொல்லி இருந்தால் அதன் பொருள் வேறு. விஜய் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்றால் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடிள்ளி எடப்பாடி பழனிச்சாமி யார்? என்கிற கேள்வி இயல்பாகவே எழுந்தது.
எனவே ஆதவின் பேச்சு எடப்பாடி பழனிசாமியை உரசிப்பார்க்கும் பேச்சு என பலரும் சுட்டிக்காட்டி வந்தனர். இந்த பேச்சு இரண்டு விதமாக பார்க்கப்பட்டது. ஒன்று எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை. நாங்கள் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. எனவே நீங்கள் கொடுக்கும் 40, 45 சீட்டுகள் எங்களுக்கு தேவை இல்லை என்பது ஒரு பொருள்.
தற்போது திரை மறைவில் அதிமுகவுக்கும், தவெகவுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அந்த பேச்சு வார்த்தையில் எப்படி தேமுதிகவுக்கு 2011 தேர்தலில்41 இடங்கள் வழங்கப்பட்டதோ, அதேபோல் உங்களுக்கு 40 இடங்கள் 45 இடங்கள் கொடுக்கிறோம் என்று அதிமுக தரப்பில் தவெகவுக்கு தூது போனவர்களிடம் எடப்பாடியார் சொல்லி அனுப்பியதாக கூறப்படுகிறது.
எனவே வெறும் 45 இடங்களை நாங்கள் வாங்குவதற்கு வரவில்லை. 100 இடங்களாவது வேண்டும் அல்லது சரிசமமாக ஆளுக்கு 117 என்ற சமன்பாட்டில் தொகுதிகளை வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே தங்களது கூட்டணி பேரத்தை, வலிமையை பெருக்குவதற்காக அல்லது தனித்து களம் காண்பதற்காக என இரண்டு அர்த்தங்களில் ஆதவ் அர்ஜூனவின் அந்தப் பேச்சு அமைந்திருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக விஜய் தான் எதிர்கட்சி தலைவராக செயல்படுவார் என்றால் அது நேரடியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்படும் அழுத்தம் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்குமா? இதில், ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா? பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? அப்படி பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும் அதில் சுமூகமான கூட்டணி ஒப்பந்தம் ஏற்படுமா? என்கிற சந்தேகத்தையும் ஆதவின் பேச்சு கிளம்பி இருக்கிறது.
இந்நிலையில், தவெகா கேட்கும் அத்தனை தொகுதிகளை கொடுக்க முடியாது எனக் கூறியதால் தான் ஆதவ் அர்ஜூனா பேச்சு இதனை தெளிவுபடுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், ''அதிமுக-வுடன் கூட்டணி இல்லை என்பதில் விஜய் திட்டவட்டமாக முடிவெடுத்து விட்டதாகவும், திமுக VS தவெக என அரசியல் களத்தை விஜய் மாற்ற விரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2026-ல் முதல்வர் வேட்பாளராக விஜயை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவே தவெக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.
ஆனாலும்,'விஜய் சுற்றுப்பயணம் சென்று வந்த பின்னரே எதையும் உறுதியாக கூற முடியும்' என்கின்றனர் இரு கட்சிகளுக்கும் நெருக்கமாக உள்ள அவர்களது ஆதரவாளர்கள்.
இதையும் படிங்க: நாங்க பி.எச்.டி. தம்பி... நீ LKG விஜய்க்கு பதிலடி கொடுத்த சேகர் பாபு...!