×
 

கள்ள ஓட்டு போட்டு சிக்கிய சீமான் தம்பிகள்... கண்ணீர் விட்டு கதறிய நாதக வேட்பாளர் சீதாலட்சுமி! 

கள்ள ஓட்டு போட்டதாக நாம் தமிழர் கட்சியினர் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது ஈரோடு கிழக்குத் தொகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ள ஓட்டு போட்டதாக நாம் தமிழர் கட்சியினர் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது ஈரோடு கிழக்குத் தொகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளகோவன் உயிரிழந்ததையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியான தொகுதியாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்ட நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையும் படிங்க: சீமானால் சிக்கலில் சிக்கிய சீதாலட்சுமி... புயலைக் கிளப்பும் திருமுருகன் காந்தி - ரெண்டே நாள் தான் கெடு!

இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 46 பேர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. 2000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று  மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 5 மணி நிலவரப்படி 64.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

கள்ள ஓட்டு சர்ச்சை: 

இதனிடையே, வீரப்பன் சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியினர் வெளியூரைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்து கள்ள ஓட்டு போட முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த திமுகவினர் நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

திமுக - நாதக மோதல்: 

நாம் தமிழர் கட்சியினர் 40க்கும் மேற்பட்ட குண்டர்களை அழைத்து வந்ததாகவும், கரை வேட்டி கட்டிக்கொண்டு வாக்குச்சாவடிக்குள் வலம் வருவதாகவும் திமுகவினர் குற்றச்சாட்டினர். வாக்காளர் அடையாள அட்டைக்குப் பதிலாக வாக்குச்சீட்டுக்களை காண்பித்து நாம் தமிழர் கட்சியினர் கள்ள ஓட்டு போடுவதாகவும், ஒரு நபர் பலமுறை ஓட்டு போடுவதை தாங்கள் பார்த்ததாகவும் கூறி திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க உடனடியாக வீரப்பன் சத்திரம் வாக்குப்பதிவு மையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். 

நாதகவினர் கைது: 

வெளியூரில் இருந்து நாம் தமிழர் கட்சியினரை அழைத்து வந்து கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக திமுகவை சேர்ந்த முகவர்கள் குற்றம்சாட்டி, தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜவஹர் இரு கட்சியினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியதோடு, தேர்தல் நடத்தை விதிகளை மீறி கரூர் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த  நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சசிக்குமார், கவாஸ்கர் ஆகியோரை கைது செய்து அழைத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. 

கண்ணீர் விட்ட சீதாலட்சுமி: 

நாம் தமிழர் கட்சியினர் கள்ள ஓட்டு போட்டதாக கைது செய்யப்பட்ட நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 55 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், பெரும்பாலான வாக்குகள் சீமானுக்கு விழுந்ததை அறிந்து கொண்ட திமுகவினர் நேரடியாக வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டனர். 73வது வாக்குச்சாவடியில் பூத் ஸ்லீப் கொண்டு வாக்குப்போட வந்த சேலத்தைச் சேர்ந்த திமுக நபர் எங்கள் முகவரை மிரட்டி வெளியே துரத்தியுள்ளார். காலையில் இருந்து தண்ணீர் கூட குடிக்காமல் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக கண்காணித்து வந்தேன். வாக்கு எண்ணிக்கை முடியக்கூடிய தருணத்தில், பூத் ஸ்லீப்பை மட்டும் கொண்டு வந்து கள்ள ஓட்டு போடுகிறார்கள்.  இது பெரும் அராஜகம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள். நேற்று இரவில் இருந்தே நாம் தமிழர் கட்சி முகவர்களை வாக்குச்சாவடிக்கு வர விடாமல் மிரட்டியிருக்கிறார்கள். இந்த தேர்தலில் மாற்றம் வரும் என்றால் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொண்டு உயிரை விடக்கூட தயாராக இருக்கிறேன் என கண்ணீர் மல்க பேசியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: சீமானை விடாமல் விரட்டும் பெரியார் மண்... சாட்டை துரைமுருகன், சீதாலட்சுமி உட்பட 7 பேருக்கு ஆப்பு! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share