×
 

ரம்ஜான் வளமான சமூகத்தை கட்டமைக்க ஊக்குவிக்கிறது.. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்டோர் வாழ்த்து..!

நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்டோர் ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி, அனைத்து மசூதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜன்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரம்ஜான் பண்டிகை அனைவரது வாழ்க்கையிலும் அமைதி, முன்னேற்றம், மகிழ்ச்சியை கொண்டு வரட்டும் என்றும் புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிரார்த்தனையும் நிறைவடைவதை ரம்ஜான் பண்டிகை குறிக்கிறது. இது சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் கருணை ஆகியவற்றை வலுப்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: RAMZAN-ல் RAM...DIWALI-ல் ALI - அசத்தும் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் மத நல்லிணக்கம்..!

இந்த பண்டிகை சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கிறது மற்றும் அமைதியான மற்றும் வளமான சமூகத்தை கட்டமைக்க ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளார். இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் எனவும் மேலும் நேர்மறையான மனப்பான்மையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பலத்தை வலுப்படுத்தட்டும் என்றும் தெரிவித்தார்.இந்த நன்னாளையொட்டி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்கள், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்..

இதேபோல் துணை குடியரசு தலைவர் ஜன்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரம்ஜான் பண்டிகை நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் பகிரப்பட்ட பிணைப்புகளில் அதன் வலிமையை நினைவூட்டுகிறது என்று கூறியுள்ளார். ஈத்தின் சாராம்சம் வெறும் கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்டது என கூறியுள்ள அவர், இது ஒற்றுமை, இரக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் நமது அரசியலமைப்பு லட்சியங்களை உள்ளடக்கியது என்று தெரிவித்துள்ளார். இந்த புனிதமான சந்தர்ப்பம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதுப்பித்தல் மற்றும் நல்லிணக்கத்தின் ஆழமான உணர்வைக் கொண்டாடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடந்து, இஸ்லாமியப் பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில், அனைவருக்கும் தனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று வாழ்த்து கூறியுள்ளார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ரம்ஜான் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: மார்ச் 2ஆம் தேதி ரமலான் நோன்பு தொடக்கம்..! தலைமை ஹாஜி அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share