×
 

ரூ.12 லட்சம் கோடி காலி! பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள் என்ன?

சர்வதேச சூழல், எச்எம்பிவி வைரஸ் பரவல், டாலர் மதிப்பு, ஆசியச் சந்தையில் சரிவு ஆகியவற்றால் பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் சரிவுடன் முடிந்தது.

முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.12 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் இந்த வீழ்ச்சி என்பது கடந்த 3 மாதங்களில்  இல்லாத சரிவாக அமைந்தது. பங்குச்சந்தையின் மதிப்பு இன்று ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி குறைந்து ரூ.439 லட்சம் கோடியாகக் குறைந்தது.
முதலீட்டாளர்களின் அச்சம், கவலைகள்  போன்றவற்றால் சென்செக்ஸ், நிப்டி இன்று 1.5 சதவீதம் சரிந்தன.
மும்பைப் பங்குச்சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 1,258 புள்ளிகள் குறைந்து, 77,964 புள்ளிகளில் 1.59 சதவீதம் வீழ்ச்சியுடன் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையான நிப்டியில் 388 புள்ளிகள் குறைந்து, 23,616 புள்ளிகளில் வர்த்தகம் 1.62 %வுடன் சரிவுடன் முடிந்தது.

நிப்டியில் அதிகபட்சமாக டாடா ஸ்டீல், கோல் இந்தியா, என்டிபிசி, பிபிசிஎல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிந்தன. அப்பல்லோ மருத்துவமனை, டாடா கன்சியூமர், டைட்டன் நிறுவனம், எச்சிஎல் நிறுவனப்பங்குகள் லாபத்துடன் முடிந்தன. பொதுத்துறை வங்கி பங்குகள் 4 சதவீதம் சரிந்தன. உலோகம், ரியல் எஸ்டேட், எரிசக்தி, எண்ணெய், எரிவாயு துறை பங்குகள் 3 சதவீதம் சரிந்தன.
பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என்ன
சர்வதேச சூழல்
உலகப் பொருளாதார சூழல் சாதகமான சூழலில் இல்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதால், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை எடுத்து, டாலராக மாற்றி வெளியேறி வருகிறார்கள், இதனால் டாலரின் மதிப்பு நிலையில்லாமல் இருக்கிறது. இந்த சவால்கள் இந்திய சந்தையை கடுமையாக பாதித்தன. சீனா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடும் இறக்குமதி வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் பேசியிருப்பதும் ஆசியச் சந்தைகளில் கலக்கத்தை ஏற்படுத்தியது
3-வது காலாண்டு முடிவுகள்
இந்தியச் சந்தைகளில் பல்வேறு நிறுவனங்களின் 3வது காலாண்டு விற்பனை முடிவுகள் வருகின்றன. இது எதிர்பார்த்த அளவு லாபத்தை முதலீட்டாளர்களுக்குத் தரவில்லை, உற்சாகத்தையும் வழங்கவில்லை. குறிப்பாக வங்கித்துறை, வேகமாக நுகரக்கூடிய நுகர்வோர் துறை சரிவைச் சந்தித்துள்ளன. 
எச்எம்பிவி வைரஸ்
சீனாவில் பரவி வரும் எச்எம்பிவி வைரஸ் மீண்டும் கொரோனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்துமோ, லாக்டவுன் நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது. இந்த அச்சத்தால் முதலீட்டாளர்கள் சந்தையில் இருந்து முதலீட்டை திரும்பப் பெற்றதால் பங்குகள் சரிவை நோக்கிச் சென்றன.

வெளிநாட்டு முதலீடு வெளியேற்றம்
இந்தியச் சந்தையில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வெளியேறிவருவது சந்தையில் நிலையற்ற தன்மைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 2025 தொடங்கியதிலிருந்து ரூ.7ஆயிரம் கோடிக்கு முதலீடு வெளியேறியுள்ளது. டிசம்பரில் ரூ.15,446 கோடி முதலீடு வெளியேறியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து தொடர்ந்து மாதந்தோறும் ரூ.10ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடு வெளியேறியது சந்தையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியதும் சரிவுக்கு காரணமாகும்.
வங்கித்துறைக்கு நெருக்கடி.

இந்திய பங்குச்சந்தைகள் சரிவுக்கு மற்றொரு காரணம் வங்கித்துறை பங்குகள் மதிப்பு சரிந்தது. எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி பங்குகள் இன்று கடுமையாக சரிந்தன. எச்டிஎப்சி பங்குகள் மதிப்பு 2.1%, ஆக்சிஸ் வங்கி 1.8%, எஸ்பிஐ 1.9%, இன்டஸ்இன்ட் வங்கி 2.6%, பெடரல் வங்கி 3.2% பங்கு மதிப்பு சரிந்தது சந்தையின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க: Laptop வாங்கப்போறீங்களா..? இதெல்லாம் செக் பண்ணாம வாங்காதீங்க

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share