அரசியலில் பெரியாரை 'உடைக்கும்' சீமான்... தலையில் வைத்து கொண்டாடும் துக்ளக் குருமூர்த்தி!
தமிழக அரசியலில் முதன்முதலில் பெரியாரை நேரடியாக எதிர்த்தவர் சீமான்தான். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன் என்று துக்ளக் இதழ் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் திருநாள் அன்று துக்ளக் இதழின் ஆண்டு விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசுகையில், தமிழ்நாட்டு அரசியல் விஷயங்களைப் பேசினார். "2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் கூட்டணி கணக்குகளை இப்போதே நம்மால் கணிக்க முடியாது என்று தோன்றுகிறது. தமிழக அரசியல் களத்துக்குப் புதிதாக நடிகர் விஜய் வந்துள்ளார். எனவே, திமுகவுக்கு நெருக்கடி ஏற்படும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக வீழ்த்துப்பட வேண்டியது மிகவும் அவசியம். அதுதான் தமிழகத்திற்கு செய்யும் தொண்டு என துக்ளக் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த இடத்தில் இன்னோர் விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஊழலில் திமுக, அதிமுக என்கிற பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இரண்டுமே ஒன்றுதான். ஆனால், அதிமுக தேசியத்துக்கு விரோதமான கட்சி கிடையாது. அதேபோல அதிமுக இந்து விரோத கட்சி என்றும் சொல்ல முடியாது. அதிமுகவிடம் ஆக்கப்பூர்வமாக பார்க்கும் தன்மை உள்ளது.
எனவே தமிழக சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சிறப்பான வியூகம் வகுப்பது மிகவும் முக்கியம். இத்தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் கைகோர்க்க வேண்டும். இத்தேர்தலில் இருவரும் கூட்டணி வைப்பார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் தலைவருக்கான பக்குவம் இல்லை. நல்ல மனிதர்தான். ஆனால், கடந்த தேர்தலில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்.
இதையும் படிங்க: இதோ வந்து விட்டார் திமுக ஆட்சியில் காணாமல் போயிருந்த கட்டப்பா… சத்யராஜை உசிப்பிவிட்ட சீமான்..!
சீமானுக்கும் எனக்கும் கருத்து வேற்றுமை உண்டு. ஆனால், தமிழக அரசியலில் முதன்முதலில் பெரியாரை நேரடியாக எதிர்த்தவர் சீமான்தான். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். பெரியாரை பத்திரிகை துறையில் உடைத்தது சோ. தற்போது அரசியலில் சீமான் உடைத்துக் கொண்டிருக்கிறார். அதேபோல திராவிட மாடலும் உடைந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் நாம் சமூக வலைதளங்களில் சரியான முறையில் பரப்ப வேண்டும்" என்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.
இதையும் படிங்க: 'அந்த கைத்தடியா..? இந்தத் துப்பாக்கியா..? திராவிட பெரியாரை வீழ்த்தாமல் விடமாட்டேன்..!' மீண்டும் சினம் கொண்டு சீறும் சீமான்..!