×
 

பாட்டு கச்சேரி நடத்தி பெரியாரிஸ்ட்டுகளை வெறுப்பேற்றிய நாதகவினர்... சுடச்சுட பிரியாணியுடன் தூள் பறந்த விருந்து!

சீமான் வீட்டின் முன்பு கூடியிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சுடச்சுட பிரியாணியுடன் பாட்டு கச்சேரி நடத்திய நீலாங்கரையையே அதிரவைத்துள்ளனர். 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்தை முற்றுகையிட வந்த பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சீமான் வீட்டின் முன்பு கூடியிருந்த நாம் தமிழர் கட்சியினர் சுடச்சுட பிரியாணியுடன் பாட்டுக் கச்சேரி நடத்தி கொண்டாடியுள்ளனர். 

சீமான் வீடு முற்றுகை: 

தாய்- மகளுடன் உறவு வைத்துக் கொள்ள சொன்னவர்தான் பெரியார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே சீமான் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் பாய்ந்து வருகின்றன. 

இதையும் படிங்க: “அதெல்லாம் முடியாது... முடியாது” - சீமானுக்கு சென்னை ஐகோர்ட் கட் அண்ட் கறார் உத்தரவு! 

இதனிடையே, பெரியார் குறித்து கொச்சைக் கருத்துக்களை பரப்பி வரும் சீமான் இல்லத்தை இன்று முற்றுகையிட உள்ளதாக மே 17 இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விருதலைக் கழகம்  உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அமைப்புகளைக் கொண்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. 

செருப்பு, துடைப்பத்தால் அடித்து ஆவேசம்: 

அதன்படி இன்று காலை 11 மணி அளவில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரியாரிஸ்ட்டுகள் பேரணியாக சீமான் வீட்டை நோக்கி புறப்பட்டனர். 

பெரியாரைத் தரக்குறைவாக விமர்சிக்கும் சீமான் முழுக்க முழுக்க சங்கியாக மாறிவிட்டதாகவும், அவர் ஆர்எஸ்எஸ் கைக்கூலி போல செயல்படுவதாகவும் ஏற்கனவே பெரியாரிய அமைப்புகள் குற்றச்சாட்டி வருகின்றன. சீமானை ஆர்எஸ்எஸ் உடையில் சித்தரிக்கும் உருவப்படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஆவேசமாக தாக்கிய பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர், அவரது உருவ பொம்மையை சாலையில் போட்டு ஒப்பாரி வைக்கும் போராட்டத்தையும் நடத்தினர். 

தடுத்து நிறுத்திய காவல்துறை: 

சீமான் வீட்டை அனுமதியின்றி முற்றுகையிட முயலும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினரைத் தடுத்து நிறுத்துவதற்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்கு 500 மீட்டருக்கு முன்னதாகவே காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை பேரிகார்டு போட்டு தடுத்து நிறுத்தினர். இருப்பினும், தடையை மீறி முன்னேறிச் செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். 


உருட்டுக்கட்டையுடன் சீமான் தம்பிகள்: 

இதனிடையே, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லம் முன்பு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சீமான் இல்லத்தை முற்றுகையிட முயல்பவர்களை தடுத்து நிறுத்துவதற்காக நேற்றிரவு முதலே ஏராளமான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்தனர். இதில் ஆண், பெண் என எவ்வித பாகுபாடுமின்றி நாம் தமிழர் உடன்பிறப்புகள் கையில் உருட்டுக்கட்டையுடன் சீமான் வீட்டை வட்டமிட்டு வந்தனர். சீமான் வீட்டை பாதுகாக்க வந்த நாதகவினருக்கு காலையிலே சுடச்சுட உணவு வழங்கப்பட்டது. 

சாப்பிட்டுவிட்டு தேம்பாக சண்டை செய்வார்கள் என பார்த்தால், பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் அதற்கான தேவை இல்லாமல் போனது. இருப்பினும், காலை முதலே காவல் இருந்ததற்காக நாம் தமிழர் கட்சி தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் மதியம் சுடச்சுட பிரியாணி விருந்து தரப்பட்டது. இந்த விருந்துடன் இந்தி பாட்டை ஒலிக்கவிட்டு பாட்டு கச்சேரி எல்லாம் நடத்தி துள்ளாட்டம் போட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: சீமான் வீடு முற்றுகை; கையில் உருட்டுக்கட்டையுடன் குவிந்த நாதவினர்; நீலாங்கரையில் உச்சக்கட்ட பதற்றம்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share