×
 

தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இருதரப்பு மீனவர்கள் பேச்சுக்கு ஏற்பாடு செய்ய அன்புமணி வலியுறுத்தல்..!

தமிழக மீனவர்கள் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இருதரப்பு மீனவர்கள் பேச்சுக்கு ஏற்பாடு செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மேலும் 11 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண  இருதரப்பு மீனவர்கள் பேச்சுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு..

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  இராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 மீனவர்களை அவர்களின் விசைப்படகுடன் இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்குடன் சிங்களப்படையினர்  தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

இதையும் படிங்க: போராட்ட களத்திற்கு வரும் விஜய்... ஹேப்பி மோடில் வரவேற்ற திருமா...!

தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் கைது செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை எந்த நிபந்தனையும்  இல்லாமல் விடுதலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த இலங்கை அரசு, அண்மைக்காலமாக  மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம்  விதிப்பதையும்,  ஆண்டுக்கணக்கில் சிறை தண்டனை விதிப்பதையும்  வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி கொழும்பில் நடைபெற்ற  இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளின் மீனவர்கள் நலனுக்கான கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது என்பதால் இந்த சிக்கலை மனித நேயத்துடன் அணுக வேண்டும்;  இரு நாட்டு மீனவர் அமைப்புகளின் பேச்சுகளுக்கு விரைவாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதன்பின் 5 மாதங்களாகிவிட்ட நிலையில் இரு தரப்புப் பேச்சுகள் இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மீனவர்கள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படுவதும் தொடர்கிறது.

இந்தியா - இலங்கை இடையிலான கடல் பரப்பின் அளவைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இரு தரப்பு மீனவர்களும் எல்லை தாண்டாமல் மீன் பிடிப்பது சாத்தியம் இல்லை என்பது தான் எதார்த்தம். இதை இலங்கை அரசுக்கு இந்தியா புரிய வைக்க வேண்டும். தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைககளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே  பேச்சு நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த எக்ஸ் தள பதிவில் அவர் கூறியுள்ளார்.
 

இதையும் படிங்க: சதுப்பு நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்.. கிராம சபைகளுக்கு அன்புமணி கோரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share