கல்வி நிதியை தராவிட்டால் கெட் அவுட் மோடிதான்... மத்திய அரசை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்.!
இந்தியைத் திணித்தால் இன்னொரு மொழிப் போரை தமிழகம் சந்திக்க தயங்காது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்தார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்ததைக் கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தமிழகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். “மொழி, கல்வி, நிதி உரிமைக்காக தற்போது போராட்டம் நடத்துகிறோம். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.
தமிழகத்தில் இரு மொழி கொள்கையில் படித்துதான் சாதித்துள்ளார்கள். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் படித்தவர்களில் 99 சதவீதம் பேர் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். இந்தியை அனுமதித்த ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தங்களது தாய்மொழியை இழந்துவிட்டது.
தமிழகத்தை ஒருபோதும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. தமிழகம் ஒருபோதும் மும்மொழியை ஏற்காது. இந்தி திணிப்பைக் கைவிடாவிட்டால் இன்னொரு மொழிப் போரை சந்திக்கவும் தமிழகம் தயங்காது. தங்கள் கட்சிப் பெயரில் அண்ணாவையும், திராவிடத்தையும் வைத்துள்ளது அதிமுக. ஆனால், மும்மொழிக் கொள்கையை எதிர்த்து நடத்தும் போராட்டங்களில் எங்களைப் பற்றி அவதூறு பேசாமல், அரசியல் செய்யாமல் தெருவில் வந்து போராட வேண்டும். இந்தியை திணிக்க முற்பட்டால் அதைத் தடுக்கவும் தமிழ் மொழியைக் காக்கவும் ஆயிரம் பேர் உயிரைக் கொடுக்க தயாராக இருக்கிறோம்.
தமிழகத்திற்கான கல்வி நிதியைத் தராவிட்டால் இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறும். ‘கோ பேக் மோடி’ என்ற மக்கள்,
‘கெட் அவுட் மோடி’ என சொல்லும் நிலை வரும். இந்தப் போராட்டம் முடிவுக்கு வருவதும் தொடர்வதும் மத்திய அரசின் கையில்தான் உள்ளது” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இதையும் படிங்க: எங்க பொறுமையைச் சோதிக்காதீங்க.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திருமாவளவன் எச்சரிக்கை.!