×
 

கவலை கொள்ளாத தமிழக அரசு! அதிகரித்துவரும் கடன், வருவாய் பற்றாக்குறை!

தமிழக அரசுக்கு வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வருவது, கடன்சுமை அதிகரித்து வருவது கவலைக்குரியதாக மாறியுள்ளது. ஆனால், இது குறித்து தமிழக அரசு கவலைப்படுவது போன்றும், அதைக் குறைக்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் தெளிவான அறிவிப்பு இல்லை.

சட்டப்பேரவையில்  எதிர்க்கட்சித் தலைவரும் அஇஅதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துவருவதை சுட்டிக்காட்டிப் பேசி, கவலைக்குரியதாக மாறி வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார். தமிழக அரசின் நிதி நிலை குறித்த இடைக்கால மதிப்பாய்வில் வருவாய் பற்றாக்குறை, நிதிநிலைமை, கடன் சுமை குறித்து தெளிவாகத் தெரிகிறது.


தமிழக அரசு கடந்த மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, “ வருவாய் பற்றாக்குறை கடந்த 2013-14ம் ஆண்டிலிருந்துதான் அதிகரித்து வருகிறது. 2012-13ம் ஆண்டில் தமிழக அரசுக்கு உபரி  வருவாய் இருந்துள்ளது, ஏறக்குறைய ரூ.1,760 கோடி உபரிவருவாய் இருந்துள்ளது” எனத் தெரிவித்தது.


2011 முதல் 2015 வரை தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சியில் இருந்தது. அதிலும் 2011 முதல் 2013 வரை தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தார். 2014 செப்டம்பர் முதல் 2015 மே வரை ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டில் திமுக அரசு வருவாய் பற்றாக்குறை குறித்து தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையின்படி, “பொதுவாக, வருவாய் வரவினங்கள் வருவாய் செலவினத்தை விட அதிகமாக இருக்க வேண்டும், இதனால் மீதமுள்ள தொகை மூலதனச் செலவினங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படலாம். ஆனால், வருவாய் செலவினம் வருவாய் வரவினத்தைவிட அதிகரித்தால், அந்தப் பற்றாக்குறைதான் வருவாய் பற்றாக்குறையாகும். இந்த இடைவெளியே ரொக்கக் கையிருப்பு மற்றும் கடன் மூலம் சமாளிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனைகள்... தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்...


தமிழக அரசுக்கு வருவாய் பற்றாக்குறை 2020-21ம் ஆண்டில் உச்சக்கட்டத்தில் இருந்தது. ஏனென்றால், அப்போது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று இருந்தது, அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய்கள் முறையாக வரவில்லை என்பதால் வருவாயைவிட, செலவு அதிகரித்தது. 2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை ஏறி இறங்கியது. 2023-24ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை மீண்டும் அதிகரித்தது. எப்போது உபரிவருவாய் ஏற்படும் என்று கேள்விகள் எழுந்தன
சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு தமிழக பட்ஜெட் தாக்கலின்போது, அரசு கூறுகையில் உபரி வருவாயைக் கொண்டுவர இன்னும் ஓர் ஆண்டு ஆகலாம், 2026-27ம் ஆண்டில் உபரி வருவாய் உருவாகும் அப்போது ரூ.5,967 கோடிவரை உபரி வருவாய் வரலாம் எனத் தெரிவித்தது.


வருவாய் செலவினங்கள் தமிழக அரசுக்கு அதிகரித்தமைக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி அளிப்பது அரசுக்கு கூடுதலாக சுமையை ஏற்றியுள்ளது. நடப்பு நிதியாண்டில் செலவினங்களைக் கருத்தில் கொண்டு மதிப்பிட்டு, தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.49,279 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்காக மட்டும் ரூ.13,720 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு சந்திக்கும் நிதி அழுத்தம் அதிகரித்துள்ளது.

வருவாய் வரவினங்கள் மற்றும் வருவாய் செலவினங்கள் இடையே இடைவெளி அதிகரிப்பதற்கு 3 முக்கியக் காரணங்கள் உள்ளன. மத்திய அரசின் வரிகளைப் மாநிலத்துக்கு பகிர்ந்தளிப்பதில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட தொடர்ச்சியான நிதி ஆணையங்களால் இழைக்கப்பட்ட வரலாற்று அநீதி.
ஜிஎஸ்டி இழப்பீடு தொகை 2022, ஜூன் 30ம் தேதியுடன் நிறுத்தப்பட்டதால் ரூ.20 ஆயிரம் கோடி வரை தமிழக அரசுக்கு இழப்பு, மூன்றாவதாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் இழப்புகளை சரி செய்ய மானியம் வழங்குவது. 2023-24ம் நிதிஆண்டில் வரி மானியம் மற்றும் தள்ளுபடி வகையில் ரூ.32,100 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது. 2024-25ம் ஆண்டில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு மட்டும் ரூ.9700 கோடி வரி மானியமாக வழங்கியுள்ளது தமிழக அரசு.

இது தவிர ஒவ்வொரு ஆண்டும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், புயல்,மழையால் ஏற்படும் பாதிப்புகளாலும் வருவாய் செலவினங்கள் அளவு, வருவாய் வரவைவிட அதிகரித்துள்ளது.
இதனால் வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்க தமிழக அரசு தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக்தில் திமுக அரசில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்றபோது தமிழக அரசின் கடன் ரூ.4.86 லட்சம் கோடியாக இருந்தது. இது 2025 மார்ச் மாதம் ரூ.8.33 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் நிகர கடந் ரூ.3.50 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
ஆனால், 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரை அளவுக்குள்ளேதான் கடன் பெறுகிறோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3 சதவீதம் அளவு கடன் பெறலாம் என நிதி ஆணையம் தெரிவித்துள்ளது கூடுதலாக 0.50% வரை பெறலாம்.  இதன்படி கடன்பெறும் அளவு உள்நாட்டு மொத்த  உற்பத்தியில் 3.44 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் கடன் ரூ.3.50 லட்சம் கோடி அதிகரி்த்துள்ளது குறித்தும், வருவாய் வரவினத்தைவிட வருவாய் செலவினங்கள் அதிகரித்து வருவது குறித்து தமிழக அரசு வெளிப்டையாக பேசவில்லை, வெள்ளை அறிக்கையும் விடவில்லை

இதையும் படிங்க: தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் தொடக்கம்... 5300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு அறிமுகம்.. முதலமைச்சர் பெருமிதம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share