நீட் எதிர்ப்பை முழுமனதோடு கடைபிடிக்கிறது திமுக அரசு.. திருமா பாராட்டு பத்திரம்!!
வக்பு வாரிய சட்டம் நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம். இது இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை. ஆளும் பாஜக அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இதனை அரங்கேற்றி உள்ளது. வேறு எந்த மதத்தின் சொத்து விவகாரங்களிலும் தலையிடாத மத்திய அரசு, வக்பு வாரியத்தில் அடாவடித்தனமாக தலையிடுகிறது.
வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத நபர்களை நியமிக்க சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். இதற்கு பாஜக வெளிப்படைத்தன்மை எனக் கூறுகிறது. பெளத்த மதத்தில்,புத்த விகாரில் பவுத்தர் அல்லாதவர்களை நியமித்து இன்று வரை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இதனை எதிர்த்து புத்த பிட்சுகள் போராடி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசின் மத விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து, ஏப்ரல் 8ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர உள்ளோம். மக்களவையில் 232 பேர் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளோம். மாநிலங்களவையில் 95 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிமுகவும் எதிர்த்து வாக்களித்தது. இது ஆறுதல் அளித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பாஜக இதனை சாதித்திருக்கிறார்கள் . அரசியல் காரணங்களுக்காக கூட்டணி கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உதயநிதி, விஜய் இந்து விரோத தீயசக்திகள்.. ஆ.ராசா இந்து விரோத கோமாளி.. பொளந்துக்கட்டிய ஹெச்.ராஜா.!
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. பிரதமர் மோடி இலங்கை பயணத்தில் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மோடி இதுகுறித்து பேசுவார் என எதிர்பார்க்கிறோம். நீட் மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை தமிழக முதல்வர் கூட்டி உள்ளார். அவரது முயற்சிக்கு ஆதரவளிப்போம். நீட் விவகாரத்தில் அரசியல் காரணங்களை முன்னிறுத்தாமல் அனைத்து கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும். திமுக அரசு பதவி ஏற்ற காலத்தில் இருந்து நீட் எதிர்ப்பை முழு மனதோடு கடைபிடித்து வருகிறது.
முயற்சி எடுக்காமல் இருந்தால், வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டார்கள் என்று கூறலாம். விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் மத்திய ஆட்சியாளர்கள்தான். தமிழக ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம்தான் பள்ளிக் கல்வித்துறையில் சிறந்து விளங்கி வருகிறது. மரத்தடி வகுப்புகள் இன்றும் நடக்குமானால் அதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். பள்ளி வகுப்பறை எண்ணிக்கைகளை பெருக்க வேண்டும். வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பிஹாரில் நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர். ஆதாய அரசியல் செய்யும் கூட்டணி கட்சிகளுக்கு இது பெரிய சவுக்கடி. பாஜக கூட்டணிக்கட்சிகள் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக செயல்படக் கூடாது,” என்று திருமாவளவன் கூறினார்.
இதையும் படிங்க: மசோதா நிறைவேற்றம் திருப்புமுனை: இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்க முடியும்… மோடி பெருமிதம்..!