வேங்கைவயல் விவகாரம் - தனிமனித மோதலே காரணம்... நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
வேங்கைவயல் விவகாரம் - தனிமனித மோதலே காரணம் : தமிழக அரசு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த விவகாரத்தில் குற்றவாளிகள் இன்னார் தான் என நீதிமன்றத்தில் தமிழக அரசு எடுத்துரைத்துள்ளது.
வேங்கைவயல் வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், இச்சம்பவம் தொடர்பாக 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு 196 செல்போன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறினார்.
அந்த சமயத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறிய நபர்களின் செல்போன்கள் அவர்கள் எடுத்துக் கொண்ட செல்பிகள், அவர்கள் தொடர்பு கொண்ட எண்கள் ஆகியவை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டதாக ஜின்னா தெரிவித்தார். 87 அலைபேசி கோபுரங்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, அச்சமயத்தில் அப்பகுதியில் இருந்ததாக தெரியவந்த 37 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கி.வீரமணியை கண்டிக்கும் விசிக...பெரியாரை விமர்சிக்கும் சீமானை கண்டிக்காமல், வேங்கை வயல் விவகாரத்தில் அரசை ஆதரிப்பதா? என கேள்வி
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறும்வரை அந்த நீரில் மனிதக்கழிவு கலக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜின்னா எடுத்துரைத்தார். சரியா 7.35 மணிக்கு தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கழிவு கலக்கப்பட்ட நீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதல்களோ, மத மோதல்களோ பின்னணியாக இல்லையென்றும், தனிநபர் மோதலே இதற்கு காரணம் என்றும் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளுக்குப் பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
இதையும் படிங்க: சிபிஐ விசாரணை தேவையில்லை.. இதைப் பண்ணாலே போதும்.. வேங்கைவயல் வழக்கில் விஜய் புது ஐடியா.!