களத்தில் விஜய்... கலக்கத்தில் ஸ்டாலின்... ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வரும் தவெகவினர்...
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள பசுமைவிமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக ரீதியில் ஏகனாபுரம் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசியல் கட்சியினர் அவ்வப்போது சென்று சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவிப்பது வழக்கம். அப்படி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் சென்று பார்க்கப் போவதாக அறிவித்தார். ,
இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகத்திடம் அனுமதி கோரினர் தவெகவினர். ஆனால் எந்த இடத்தில் சந்திப்பு நிகழ வேண்டும் என்பதில் சர்ச்சை தொடங்கியது. நேற்று நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில் அம்பேத்கர் திடலில் போராட்டக்காரர்களை சந்திக்க வேண்டும் என தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தனியார் திருமண மண்டபத்தில் பிற்பகல் 12 மணிமுதல் 1 மணி வரை மட்டுமே சந்திக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டார் விஜய்..
அந்தவகையில் இன்று பிற்பகல் போராட்டக்காரர்களை நடிகர் விஜய் சென்று சந்திக்க உள்ளார். அப்போது கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் யாரும் அங்கு வரவேண்டாம் என்று தவெக தலைமை அறிவுறுத்தி உள்ளது.. சமீபத்தில் பெய்த கனமழையால் விழுப்புரம் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்களில் ஒருசிலரை தனது பனையூர் வீட்டிற்கு வரவழைத்து விஜய் நிவாரண உதவிகள் வழங்கியது சர்ச்சையானது. பாதிக்கப்பட்டவர்களை களத்தில் சென்று சந்திக்காமல் வீட்டிற்கு வரவழைப்பதா? என விமர்சனங்கள் எழுந்தன. இதன்ஒருபகுதியாகவே பரந்தூருக்கு விஜய் விசிட் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜயின் தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்..! அப்படியே வருவாரா..? அறுத்து விட்டு வருவாரா..?
இந்நிலையில் தவெகவின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் SAY NO TO PARANDUR AIRPORT என்ற தலைப்பில் நள்ளிரவில் ஒரு செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை விமான நிலையத்தைஉ விரிவுசெய்ய கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள 852 ஏக்கர் நிலத்தை ஏன் பயன்படுத்த மறுக்கிறீர்கள்? பணக்காரர்களின் நிலத்தைப் பறிக்க முடியாதா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தென் மாவட்ட மக்களுக்கு சென்னை விமான நிலையம் தேவையில்லை, அவர்களுக்கு தென்பகுதியிலேயே சர்வதேச விமானங்கள் வேண்டும்! விவசாயத்தை அழித்துக் கட்டப்படும் விமான நிலையம் வளர்ச்சி அல்ல, அழிவு! சேலம், நெய்வேலி விமான நிலையங்களை செயல்படுத்துங்கள், புதிதாகக் கட்ட வேண்டாம் என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
பெரு நிறுவனங்களின் லாபத்திற்காக விவசாயிகளின் வாழ்வைச் சீரழிக்காதீர்கள்! சென்னை - பரந்தூர் இடையேயுள்ள வேளாண் நிலங்களும், நீர்நிலைகளும் புதிய விமான நிலையத்தால் அழியும்! 2050ல் சென்னையில் 13.5 கோடி பயணிகள் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற கணிப்பு என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதியில் விமான நிலையம் கட்டுவது ஆபத்தானது! விவசாயிகளின் கண்ணீரில் கட்டப்படும் விமான நிலையம் வேண்டாம்! மூன்று மணி நேர பயணத்திற்குள் 6 விமான நிலையங்கள் உள்ள மாநிலத்தில் புதிய விமான நிலையம் தேவையா? என்றும் தவெக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
உணவு உற்பத்தியைப் பாதிக்கும் திட்டங்கள் வேண்டாம்! என்றும் விவசாய நிலங்களை பாதுகாப்பது அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பு என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. உச்சக்கட்டமாக இதற்கு தவெகவினர் பயன்படுத்தி உள்ள ஹேஷ்டேக் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. களத்தில் விஜய்... கலக்கத்தில் ஸ்டாலின்...என தவெக இதற்கு பெயரிட்டுள்ளது. விஜயின் முதல் களப்போராட்டமும், திமுக மீதான நேரடி விமர்சனமும் அரசியல் வட்டாரத்தில் புதிய சூட்டினை பற்ற வைத்துள்ளது.
இதையும் படிங்க: Vijay to meet Parandur protesters: பனையூர் டு பரந்தூர்; விஜய் கையில் எடுத்த ஆயுதம்; பறந்து வந்த கிரீன் சிக்னல்!