விசாரிக்காமல் ஏன் தாவுகிறீர்கள்?...கே.பாலகிருஷ்ணன், அண்ணாமலைக்கு நேரடி கண்டனம் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.
அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக கண்டனம்..
பள்ளிக்கல்வித்துறையில் 500 பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைக்கு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார் என திமுக தோழமைக்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியும், பாஜகவும் அறிக்கை விட்ட நிலையில் எதையும் விசாரிக்காமல் ஏன் தாவுகிறீர்கள் அறிக்கை விட்டு எங்களை சங்கடப்படுத்துகிறீர்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தோழமைக்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ’அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகள் அமைப்பு தத்தெடுக்கவும் தாரை வார்க்கவும் அமைச்சர் ஒப்புதல் கொடுத்துள்ளார், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக் கொடுக்க முனைவது, ஏழை மக்களின் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல், இது படிப்படியாக பள்ளிக்கல்வித்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் புதிய கல்விக்கொள்கையின் ஒரு அங்கம்’ என அறிக்கையில் காட்டமாக தெரிவித்திருந்தார். இது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலையும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இதை கண்டித்திருந்தார், அவரது அறிக்கையில், “500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி. மாவட்டக் கல்வி அலுவலகங்களின் இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.5 கோடியைக் கூட கட்டாமல், இணைப்பு துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்றது பள்ளிக் கல்வித் துறை. கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
செய்தி எவ்வளவு நம்பகத்தன்மையாக இருக்க வேண்டும் என்பது உண்மை. சரியான செய்தியா என்பதை பார்க்க வேண்டும். நான் அப்படி பேசினேனா? தத்தெடுப்பது, தாரை வார்ப்பதாக பேசினேனா என்பதை பார்க்க வேண்டும். அப்படி அதை ரீ செக் செய்யாமல் தாரை வார்க்கிறார்கள் அறிக்கை கொடுக்கலாமா? வன்மையாக கண்டிக்கிறோம் என்று கிராஸ் செக் செய்யாமல் அறிக்கை கொடுக்கும்போது எங்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வருத்தப்படுகிறார்கள். எனவே வன்மையாக கண்டிக்கிறோம் என்று சொல்லும்போது அதிகாரிகள் சார்பாக நாங்களும் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக விவகாரம் ..எதிர்க்கட்சிகளின் மெளனம் வெட்கக்கேடானது..ஜி.கே வாசன் சாட்டையடி ..!
என்ன பேசப்பட்டது என்பதை பாருங்கள். சி.எஸ்.ஆர் நடவடிக்கை மூலமாக தனியார் பள்ளியை நடத்துகிறோம் என்றால் நாங்களும் அரசு பள்ளிகளில் படித்து வந்தவர்கள் தான். நம்ம ஸ்கூல் என முதல்வர் 5 லட்ச ரூபாய் கொடுத்து ஆரம்பித்த அந்த சிஎஸ்ஆர் நிதியில் 504 கோடி ரூபாய் நம்ம ஊரு பள்ளியில் வந்திருக்கிறது. 350 கோடி ரூபாய்க்கு மதிப்பிலான பணிகள் நடந்து வருகிறது. அதனால் நாங்களும் எங்களது பங்களிப்பை அரசு பள்ளிகளுக்கு அளிக்க விரும்புகிறோம் என்று சொன்னபோது நன்றி என்று தான் சொன்னோம்.
ஆனால் அதில் தாரை வார்த்துவிட்டீர்கள், தத்துகொடுத்துவிட்டீர்கள் என்று சொல்வது எப்படி, ஒன்றுமட்டும் புரிந்துக்கொள்ளுங்கள். எஸ்.எஸ்.ஐ அமௌண்ட்டை கொள்கையை விட்டுக்கொடுத்து பணத்தை வாங்கவேண்டாம் என்று சொல்லக்கூடிய முதல் அமைச்சர்தான் நம் முதல்வர். இன்றைக்கும் அதற்கான சம்பளம் ரூ 500 கோடி அளவுக்கு மாநில அரசு ஏற்றுக்கொள்கிறது. இது இப்படி இருக்கும்போது இதை தவறுதலாக புரிந்துக்கொண்டு அறிக்கை கொடுப்பது எப்படி சரியாக இருக்கும்.
நான் தொலைபேசியில் தனியார் பள்ளி அமைப்புகள் அவர்கள் சங்கத்தின் சார்பாக அறிக்கை கொடுத்த பிறகும், மீண்டும் அதேபோல் அறிக்கை வருகிறது. இதனால் நாங்கள் சங்கடமும் பட்டிருக்கிறோம் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தக்கட்டத்திற்கு எங்கள் துறை செல்லும்போது இதுபோன்ற அறிக்கைகள் எங்களை சோர்வடைய வைக்கிறது. என்னவென்று விளக்கம் கேளுங்கள் அதில் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் கண்டனம் தெரிவியுங்கள்.
எங்களை செயல்பட விடுங்கள். விளக்கம் கேட்காமல் அவசர அவசரமாக ஏன் தாவுகிறீர்கள், இந்த ஊடகங்கள் மூலமாக யார் யார் எல்லாம் இது சார்ந்து என்ன விஷயம் என்றெல்லாம் தெரியாமல் கண்டனம் தெரிவித்துள்ளார்களோ அந்த தலைவர்களுக்கு எல்லாம் நான் சொல்வது நீங்கள் நினைப்பதுபோல் தத்து கொடுப்பதோ, தாரை வார்ப்பதோ அல்ல, பள்ளி கல்வித்துறையை இன்னொருவருக்கு தத்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை வருத்தத்தோடு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். என கே.பால்கிருஷ்ணன், அண்ணாமலை ஆகியோர் பெயரை சொல்லாமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நான் அப்படி பேசல ..வீடியோ வெட்டி ஒட்டி பரப்புறாங்க..ஆண்ட பரம்பரை பேச்சுக்கு அமைச்சர் மூர்த்தி மறுப்பு ..!